திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/41.கல்லாமை

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


திருக்குறள் பொருட்பால்[தொகு]

1. அரசியல்[தொகு]

அதிகாரம் 41.கல்லாமை[தொகு]

அதிகார முன்னுரை
அஃதாவது, கற்றலைச் செய்யாமை. என்றது அதனினாய இழிபினை. கல்விச்சிறப்பு மேல் விதிமுகத்தாற் கூறியதுணையான் முற்றுப்பெறாமை நோக்கி, எதிர்மறை முகத்தானுங் கூறுகின்றதாகலின் இது கல்வியின்பின் வைக்கப்பட்டது.

குறள் 401 (அரங்கின்றி)[தொகு]

அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல் (01)
அரங்கு இன்றி வட்டு ஆடி அற்றே நிரம்பிய
நூல் இன்றிக் கோட்டி கொளல்.
இதன்பொருள்
அரங்கு இன்றி வட்டு ஆடியற்றே- அரங்கினையிழையாது வட்டாடினாற்போலும்;
நிரம்பிய நூலின்றிக் கோட்டி கொளல்= தான் நிரம்புதற்கு ஏதுவாகிய நூல்களைக் கல்லாது ஒருவன் அவையின்கண் ஒன்றினைச் சொல்லுதல்.
விளக்கம்
'அரங்கு' வகுத்த தானம். 'வட்டா'டல் உண்டையுருட்டல்.
இவை,
"கட்டளை யன்ன வட்டரங் கிழைத்துக்-
கல்லாச் சிறாஅர் நெல்லிவட் டாடும்"1
-என்பதனான் அறிக. 'நிரம்பு'தல் அறியவேண்டுவன எல்லாம் அறிதல்.
'கோட்டி' என்பது ஈண்டு ஆகுபெயர்;
"புல்லா வெழுத்திற் பொருளில் வறுங்கோட்டி"2
-என்புழிப்போல. சொல்லும் பொருளும் நெறிப்படா என்பதாம்.
1. நற்றிணை-3.
2. நாலடியார்-155.

குறள் 402 (கல்லாதான்)[தொகு]

கல்லாதான் சொற்கா முறுதன் முலையிரண்டு
மில்லாதாள் பெண்காமுற் றற்று (02)
கல்லாதான் சொல் காமுறுதல் முலை இரண்டும்
இல்லாதாள் பெண் காமுற்று அற்று.
இதன்பொருள்
கல்லாதான் சொல் காமுறுதல்= கல்வி இல்லாதான் ஒருவன் அவையின்கண் ஒன்று சொல்லுதலை அவாவுதல்;
முலை இரண்டும் இல்லாதாள் பெண் காமுற்றற்று= இயல்பாகவே முலையிரண்டும் இல்லாதாள் ஒருத்தி பெண்மையை அவாவினாற் போலும்.
விளக்கம்
"இனைத்தென வறிந்த சினை"3 யாகலின், தொகையொடு முற்றும்மை கொடுத்தார்; சிறிதும் இல்லாதாள் என்பதாம். அவாவியவழிக் கடைபோகாது, போகினும் நகை விளைக்கும் என்பதாயிற்று.
3. தொல்காப்பியம், சொல்லதிகாரம், கிளவியாக்கம்- 33.

குறள் 403 (கல்லாதவரு)[தொகு]

கல்லா தவரு நனிநல்லர் கற்றார்முற்
சொல்லா திருக்கப் பெறின் (03)
கல்லாதவரும் நனி நல்லர் கற்றார் முன்
சொல்லாது இருக்கப் பெறின்.
இதன்பொருள்
கல்லாதவரும் நனி நல்லர்= கல்லாதாரும் மிக நல்லர் ஆவர்;
கற்றார்முன் சொல்லாது இருக்கப்பெறின்= தாமே தம்மை அறிந்து, கற்றார் அவையின்கண் ஒன்றனையும் சொல்லாது இருத்தல் கூடுமாயின்.
விளக்கம்
உம்மை இழிவு சிறப்பும்மை. தம்மைத் தாம் அறியாமையின் அது கூடாது என்பார், 'பெறின்' என்றும், கூடின் ஆண்டுத் தம்மை வெளிப்படுத்தாமையானும், பின் கல்வியை விரும்புவர் ஆகலானும், 'நனிநல்லர்' என்றும் கூறினார்.
இவை மூன்று பாட்டானும், கல்லாதார் அவைக்கட் சொல்லுதற்குரியர் அன்மை கூறப்பட்டது.

குறள் 404 (கல்லாதான்)[தொகு]

கல்லாதா னொட்பங் கழிய நன்றாயினுங்
கொள்ளா ரறிவுடை யார் (04)
கல்லாதான் ஒட்பம் கழிய நன்று ஆயினும்
கொள்ளார் அறிவுடையார்.
இதன்பொருள்
கல்லாதான் ஒட்பம் கழிய நன்றாயினும்= கல்லாதவனது ஒண்மை ஒரோவழி மிக நன்றாய் இருப்பினும்;
அறிவுடையார் கொள்ளார்= அறிவுடையார் அதனை ஒண்மையாகக் கொள்ளார்.
விளக்கம்
ஒண்மை= அறிவுடைமை. அது நன்றாகாது, ஆயிற்றாயினும் ஏரல் எழுத்துப்4 போல்வதோர் விழுக்காடாகலின், நிலைபெற்ற நூலறிவுடையார் அதனை மதியார் என்பதாம்.
4. ஏரல்= நத்தை. அது மணலில் செல்லும்போது தன்னையறியாமல் செய்யும் எழுத்து-வரி- வடிவம். நத்தை மணலில் செல்லும்போது 'அ' எனும் எழுத்துவடிவில் கீறல் விழுந்தால், அதனைப்பார்த்து 'நத்தை/அதாவது ஏரல்- 'அ' என்ற எழுத்தை எழுதிவிட்டது' என்று எவரும் கூறமாட்டார்கள்.

குறள் 405 (கல்லாஒருவன்)[தொகு]

கல்லா வொருவன் றகைமை றலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும் (05)
கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல் ஆடச் சோர்வு படும்.
இதன்பொருள்
கல்லா ஒருவன் தகைமை= நூல்களைக் கல்லாத ஒருவன் யான் அறிவுடையேன் எனத் தன்னை மதிக்கும் மதி்ப்பு;
தலைப்பெய்து சொல்லாடச் சோர்வுபடும்= அவற்றைக் கற்றவன் கண்டு உரையாடக் கெடும்.
விளக்கம்
கற்றவன் என்பது வருவிக்கப்பட்டது. யாதானும் ஓர் வார்த்தை சொல்லுந் துணையுமே நிற்பது, சொல்லியவழி வழுப்படுதலின், அழிந்துவிடும் என்பதாம்.
இவை இரண்டுபாட்டானும் கல்லாரது இயற்கையறிவின் குற்றம் கூறப்பட்டது.

குறள் 406 (உளரென்னு)[தொகு]

உளரென்னு மாத்திரைய ரல்லாற் பயவாக்
களரனையர் கல்லா தவர் (06)
உளர் என்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களர் அனையர் கல்லாதவர்.
இதன்பொருள்
கல்லாதவர்= கல்லாதவர்;
உளர் என்னும் மாத்திரையர் அல்லால்= காணப்படுதலான் இலரல்லர் உளர் என்று சிலர் சொல்லும் அளவினர் ஆதலன்றி;
பயவாக் களர் அனையர்= தமக்கும் பிறர்க்கும் பயன்படாமையால் விளையாத களர்நிலத்தோடு ஒப்பர்.
விளக்கம்
களர் தானும் பேணர்பாடு அழிந்து உயிர்கட்கும் உணவு முதலிய உதவாதது போலத் தாமும் நன்கு மதிக்கற்பாடு அழிந்து, பிறர்க்கும் அறிவு முதலிய உதவார் என்பதாம்.
இதனால் கல்லாரது பயன்படாமை கூறப்பட்டது.

குறள் 407 (நுண்மாண்)[தொகு]

நுண்மா ணுழைபுல மில்லா னெழினல
மண்மாண் புனைபாவை யற்று (07)
நுண் மாண் நுழை புலம் இல்லான் எழில் நலம்
மண் மாண் புனை பாவை அற்று.
இதன்பொருள்
நுண் மாண் நுழை புலம் இல்லான் எழில் நலம்= நுண்ணிதாய் மாட்சிமைப்பட்டுப் பல நூல்களினும் சென்ற அறிவு இல்லாதவனுடைய எழுச்சியும் அழகும்;
மண் மாண் புனைபாவை அற்று= சுதையான் மாட்சிமைப்படப் புனைந்த பாவையுடைய எழுச்சியும் அழகும் போலும்.
விளக்கம்
அறிவிற்கு மாட்சிமையாவது, பொருள்களைக் கடிதில் காண்டலும் மறவாமையும் முதலாயின. பாவை ஆகுபெயர்.
"உருவின் மிக்கதோர் உடம்பது பெறுதலு மரிது"5 ஆகலான் எழில் நலங்களும் ஒரு பயனே எனினும், நூலறிவில்வழிச் சிறப்பில என்பதாம்.
இதனான் அவர் வடிவழகாற் பயனின்மை கூறப்பட்டது.
5. சீவக சிந்தாமணி, முத்தியிலம்பகம்-154.

குறள் 408 (நல்லார்கட்)[தொகு]

நல்லார்கட் பட்ட வறுமையி னின்னாதே
கல்லார்கட் பட்ட திரு (08)
நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு.
இதன்பொருள்
நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே= கற்றார்மாட்டு நின்ற வறுமையினும் இன்னாது;
கல்லார்கண் பட்ட திரு= கல்லாதார்மாட்டு நின்ற செல்வம்.
விளக்கம்
இழிவுசிறப்பும்மை விகாரத்தாற் றொக்கது. தத்தம் நிலையினன்றி மாறி நிற்றலால் தாம் இடுக்கட் படுதலும், உலகிற்குத் துன்பம் செய்தலும் இரண்டிற்கும் ஒக்குமாயினும், திரு கல்லாரைக் கெடுக்க, வறுமை நல்லாரைக் கெடாது நிற்றலான், வறுமையினுந் திரு 'இன்னாது' என்றார்.
இதனால் அவர் திருவின் குற்றம் கூறப்பட்டது.

குறள் 409 (மேற்பிறந்தாராயினும்)[தொகு]

மேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்துங்
கற்றா ரனைத்திலர் பாடு (09)
மேல் பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ்ப் பிறந்தும்
கற்றார் அனைத்து இலர் பாடு.
இதன்பொருள்
கல்லாதார் மேற்பிறந்தார் ஆயினும்= கல்லாதார் உயர்ந்த சாதிக்கண் பிறந்தாராயினும்;
கீழ்ப்பிறந்தும் கற்றார் அனைத்துப் பாடு இலர்= தாழ்ந்த சாதிக்கண் பிறந்துவைத்தும் கற்றாரது பெருமை அளவிற்றாய பெருமை இலர்.
விளக்கம்
உடலோடு ஒழியும் சாதி உயர்ச்சியினும் உயிரோடு செல்லும் கல்வி6 உயர்ச்சி சிறப்புடைத்து என்பதாம்.
இதனால் அவர் சாதியுணர்ச்சியால் பயனின்மை கூறப்பட்டது.
6. குறள்-398.

குறள் 410 (விலங்கொடு)[தொகு]

விலங்கொடு மக்க ளனைய ரிலங்குநூல்
கற்றாரோ டேனை யவர் (10)
விலங்கொடு மக்கள் அனையர் இலங்கு நூல்
கற்றாரோடு ஏனையவர்.
இதன்பொருள்
விலங்கொடு மக்கள் அனையர்= விலங்கோடு நோக்க மக்களை எத்துணை நன்மையுடையார் அத்துணைத் தீமையுடையர்;
இலங்கு நூல் கற்றாரோடு ஏனையவர்= விளங்கிய நூலைக் கற்றாரோடு நோக்கக் கல்லாதவர்.
விளக்கம்
'விலங்கு', 'நூல்' சாதிப்பெயர். விளங்குதல்=மேம்படுதல். விலங்கின் மக்கட்கு ஏற்றமாய உணர்வுமிகுதி காணப்படுவது கற்றார் கண்ணே யாகலின், கல்லாதாரும் அவரும் ஒத்த பிறப்பினர் அல்லர் என்பதாம். மயக்க நிரனிறை.
இதனால் அவர் மக்கட்பிறப்பாற் பயன் எய்தாமை கூறப்பட்டது.

கல்லாமை அதிகாரத்திற்குப் பரிமேலழகர் எழுதிய உரை முற்றுப்பெற்றது