உள்ளடக்கத்துக்குச் செல்

திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/98.பெருமை

விக்கிமூலம் இலிருந்து

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


திருக்குறள் பொருட்பால்- ஒழிபியல்

[தொகு]

பரிமேலழகர் உரை

[தொகு]

அதிகாரம் 98. பெருமை

[தொகு]
அதிகார முன்னுரை
அஃதாவது, செயற்கு அரிய செய்தல், தருக்கின்மை, பிறர் குற்றம் கூறாமை என்றிவை முதலிய நற்குணங்களாற் பெரியாரது தன்மை; நிலையினும் மேன்மேல் உயர்த்தற்Ħ பயத்தவாய இவை உளவாவது நிலையின் தாழாமை உள்வழியாகலின், இது மானத்தின்பின் வைக்கப்பட்டது.
Ħ.நாலடியார்,248.

குறள் 971 (ஒளியொருவற் )

[தொகு]

ஒளியொருவற் குள்ள வெறுக்கை யிளியொருவற் () ஒளி ஒருவற்கு உள்ள வெறுக்கை இளி ஒருவற்கு

கஃதிறந்து வாழ்து மெனல். (01) அஃது இறந்து வாழ்தும் எனல்.

தொடரமைப்பு: ஒருவற்கு ஒளி உள்ள வெறுக்கை, ஒருவற்கு இளி அஃது இறந்து வாழ்தும் எனல்.

இதன்பொருள்
ஒருவற்கு ஒளி உள்ள வெறுக்கை= ஒருவனுக்கு ஒளியாவது, பிறரால் செயற்கு அரிய செய்வேம் என்று கருதும் ஊக்கமிகுதி; ஒருவற்கு இளி அஃது இறந்து வாழ்தும் எனல்= ஒருவனுக்கு மாசாவது, அச்செயலை ஒழிந்து உயிர்வாழக் கடவேம் என்று கருதுதல்.
உரை விளக்கம்
'ஒளி': தான் உளனாய காலத்து மிக்குத் தோன்றுதலுடைமை. "ஒளிநிறா னோங்குபுகழ் செய்யான்"Â என்றார் பிறரும். மேலும், "செயற்கரிய செய்வார் பெரியர்"Ê என்றாராயினும், ஈண்டு அவை அளவிறந்த ஒப்புரவு, ஈகை முதலியவாம். அவற்றினானாய பெருமையை அதன் காரணத்தின் மேலிட்டு 'உள்ள வெறுக்கை' என்றும், அதுதன்னையே அதன் காரியமாகிய ஒளியாக்கியும் கூறினார். இவ்வாறு இதன் எதிர்மறைக்கண்ணும் ஒக்கும்.
இதனான் பெருமையின் சிறப்புக் கூறப்பட்டது.
Â.நாலடியார், 9.
Ê.குறள், 26.

குறள் 972(பிறப்பொக்கு)

[தொகு]

பிறப்பொக்கு மெல்லா வுயிர்க்குஞ் சிறப்பொவ்வா () பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பு ஒவ்வா

செய்தொழில் வேற்றுமை யான். (02) செய் தொழில் வேற்றுமையான்.

தொடரமைப்பு: எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒக்கும், சிறப்பு ஒவ்வா செய்தொழில் வேற்றுமையான்.

இதன்பொருள்
எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒக்கும்= எல்லா மக்கள் உயிர்க்கும் பொதுவாகிய பிறப்பியல்பு ஒக்குமே எனினும்; சிறப்பு ஒவ்வா செய்தொழில் வேற்றுமையான்= பெருமை, சிறுமை எனப்பட்ட சிறப்பியல்கள் ஒவ்வா, அவை செய்யும் தொழில்களது வேறுபாட்டான்.
உரை விளக்கம்
வேறுபாடு: நல்லனவும், தீயனவும் இரண்டுமாயினவும், இரண்டும் அல்லவாயினவுமாய அளவிறந்த பாகுபாடுகள். வினைவயத்தான் பஞ்சபூத பரிணாமமாகிய யாக்கையைப் பொருந்தி நின்று அதன் பயன் அனுபவித்தல், எல்லா வருணத்தார்க்கும் ஒத்தலின் 'பிறப்பொக்கும்' என்றும், பெருமை சிறுமைகட்குக் கட்டளைக் கல்Ŵலாகிய தொழிற் பாகுபாடுகள் வருணந்தோறும், யாக்கைதோறும் வேறுபடுதலின் 'சிறப்பொவ்வா' என்றும் கூறினார்.
Ŵ. குறள், 505.

குறள் 973 (மேலிருந்து )

[தொகு]

மேலிருந்து மேலல்லார் மேலல்லர் கீழிருந்துங் () மேல் இருந்தும் மேல் அல்லார் மேல் அல்லர் கீழ் இருந்தும்

கீழல்லார் கீழல் லவர் (03) கீழ் அல்லார் கீழ் அல்லவர்.

தொடரமைப்பு: மேல் அல்லார் மேல் இருந்தும் மேல் அல்லர், கீழ் அல்லவர் கீழ் இருந்தும் கீழ் அல்லார்.

இதன்பொருள்
மேல் அல்லார் மேல் இருந்தும் மேல் அல்லர்= செயற்கு அரிய செய்கலாது சிறியராயினார், உயர்ந்து அமளி முதலியவற்றின் மிசையிருந்தவராயினும், பெரியராகார்; கீழ் அல்லவர் கீழ் இருந்தும் கீழ் அல்லார்= அவை செய்து பெரியராயினார், தாழ்ந்த வறுநிலத்து இருந்தாராயினும், சிறியர் ஆகார்.
உரை விளக்கம்
மேலிருத்தல், கீழிருத்தல்களான் செல்வ நல்குரவுகளும், மேல் கீழ்களாற் பெருமை சிறுமைகளும் கருதப்பட்டன.
இவை இரண்டு பாட்டானும் முறையே குடிமை மாத்திரத்தானும், செல்வமாத்திரத்தானும் அஃது உளதாகாமை கூறப்பட்டது.

குறள் 974 (ஒருமைமகளிரே )

[தொகு]

ஒருமை மகளிரே போலப் பெருமையுந் () ஒருமை மகளிரே போலப் பெருமையும்

தன்னைத்தான் கொண்டொழுகி னுண்டு. (04) தன்னைத் தான் கொண்டு ஒழுகின் உண்டு.

தொடரமைப்பு: ஒருமை மகளிரே போலப், பெருமையும் தன்னைத்தான் கொண்டு ஒழுகின் உண்டு.

இதன்பொருள்
ஒருமை மகளிரே போல= கவராதமனத்தினை உடைய மகளிர் நிறையின் வழுவாமல் தம்மைத் தாம் காத்துக்கொண்டு ஒழுகுமாறுபோல; பெருமையும் தன்னைத் தான் கொண்டொழுகின் உண்டு= பெருமைக்குணனும், ஒருவன் நிறையின் வழுவாமல் தன்னைத்தான் காத்துக்கொண்டு ஒழுகுவானாயின் அவன்கண் உண்டாம்.
உரை விளக்கம்
பொருளின் தொழில் உவமையினும் வந்தது. கற்புண்டாதல் தோன்ற நின்றமையின், உம்மை எச்சவும்மை. ஒழுகுதல் மன மொழி மெய்களை ஒடுக்கி ஒப்புரவு முதலிய செய்துபோதல். இதனால் அஃது உளதாமாறு கூறப்பட்டது.

குறள் 975 (பெருமையுடைய )

[தொகு]

பெருமை யுடையவ ராற்றுவா ராற்றி () பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின்

னருமை யுடைய செயல். (05) அருமை உடைய செயல்.

தொடரமைப்பு: பெருமை உடையவர், அருமை உடைய செயல் ஆற்றின் ஆற்றுவார்.

இதன்பொருள்
பெருமை உடையவர்= அவ்வாற்றான் பெருமையுடையர் ஆயினார்; அருமை உடைய செயல் ஆற்றின் ஆற்றுவார்= தாம் வறியராயவழியும், பிறரான் செய்தற்கு அரியவாய தம் செயல்களை விடாது அவை செய்யும் நெறியான் கடைபோகச் செய்தலை வல்லராவர்.
உரை விளக்கம்
வறியராயவழியும் என்பது, முன்செய்து போந்தமை தோன்றப் 'பெருமையுடையவர்' என்றதனானும், 'ஆற்றுவார்' என்றதனானும் பெற்றாம். இதனால் அதனைஉடையார் செய்தி கூறப்பட்டது.

குறள் 976(சிறியாரு )

[தொகு]

சிறியா ருணர்ச்சியு ளி்ல்லை பெரியாரைப் () சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்

பேணிக்கொள் வேமென்னு நோக்கு. (06) பேணிக் கொள்வேம் என்னும் நோக்கு.

தொடரமைப்பு: பெரியாரைப் பேணிக்கொள்வேம் என்னும் நோக்கு, சிறியார் உணர்ச்சியுள் இல்லை.

இதன்பொருள்
பெரியாரைப் பேணிக் கொள்வேம் என்னும் நோக்கு= அப்பெற்றியராய பெரியாரை வழிபட்டு அவர் இயல்பினை யாம் கோடும் என்னும் கருத்து; சிறியார் உணர்ச்சியுள் இல்லை= மற்றைச் சிறியராயினார் மனத்தின்கண் உளதாகாது.
உரை விளக்கம்
குடிமை, செல்வம், கல்வி என்று இவற்றது உண்மைமாத்திரத்தால் தாம் வியந்திருப்பார்க்கு, அவை நமக்கு இயல்பென்று அமைந்திருப்பாரை வழிபட்டு அஃது உடையராதல் கூடாது என்பதாம்.

குறள் 977 (இறப்பே )

[தொகு]

இறப்பே புரிந்த தொழிற்றாஞ் சிறப்புந்தான் () இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்பும் தான்

சீரல் லவர்கட் படின் (07) சீர் அல்லவர்கண் படின்.

தொடரமைப்பு: சிறப்புந்தான், சீர் அல்லவர்கண் படின், இறப்பே புரிந்த தொழிற்றாம்.

இதன்பொருள்
சிறப்புந்தான்= தனக்கு ஒக்கும் பெரியாரிடத்து அமைந்திருத்தலைச் செய்வதாய சிறப்புத்தானும்; சீர் அல்லவர்கண் படின்= தனக்கு ஒவ்வாத சிறியாரிடத்துப் படுமாயின்; இறப்பே புரிந்ததொழிற்றாம்= அதனை ஒழித்துத் தருக்கின்கண்ணே மிக்கசெயலை உடைத்தாம்.
உரை விளக்கம்
தருக்கினை மிகச்செய்யும் என்பதாயிற்று. சிறப்பு, குடிமை செல்வம் கல்விகளினாய மிகுதி.
இவை இரண்டு பாட்டானும் அஃது இலார் செய்தி கூறப்பட்டது.

குறள் 978 (பணியுமாம் )

[தொகு]

பணியுமா மென்றும் பெருமை சிறுமை () பணியுமாம் என்றும் பெருமை சிறுமை

யணியுமாந் தன்னை வியந்து. (08) அணியுமாம் தன்னை வியந்து.


தொடரமைப்பு: பெருமை என்றும் பணியுமாம், சிறுமை (என்றும்) தன்னை வியந்து அணியுமாம்.

இதன்பொருள்
பெருமை என்றும் பணியுமாம்= பெருமையுடையார், அச்சிறப்பு உண்டாய ஞான்றும் தருக்கின்றி அமைந்தொழுகுவர்; சிறுமை (என்றும்) தன்னை வியந்து அணியுமாம்= மற்றைச் சிறுமையுடையார் அஃது இல்லாத ஞான்றும் தம்மை வியந்து புனையாநிற்பர்.
உரை விளக்கம்
பொருளின்தொழி்ல்கள் பண்பின்மேல் ஏற்றப்பட்டன. இஃது "அற்றமறைக்கும் பெருமை"Ș என்புழியும் ஒக்கும். என்றும் என்பது, பின்னும் வந்து இயைந்தது. ஆம் என்பன இரண்டும் அசை. புனைதல்: பிறரின் தமக்கோர் மிகுதியை ஏற்றிக்கோடல். இதற்கு உயர்ந்தார் தாழ்வார், தாழ்ந்தார் உயர்வார், இஃதொரு விரோதம் இருந்தவாறென் என உலகியலை வியந்து கூறிற்றாக்குவாரும் உளர்.
Ș.குறள், 980.

குறள் 979 (பெருமைபெரு )

[தொகு]

பெருமை பெருமித மின்மை சிறுமை () பெருமை பெருமிதம் இன்மை சிறுமை

பெருமித மூர்ந்து விடல். (09) பெருமிதம் ஊர்ந்து விடல்.

தொடரமைப்பு: பெருமை பெருமிதம் இன்மை, சிறுமை பெருமிதம் ஊர்ந்து விடல்.

இதன்பொருள்
பெருமை பெருமிதம் இன்மை= பெருமைக் குணமாவது, காரணம் உண்டாயவழியும் அஃது இயல்பாதல் நோக்கித் தருக்கின்றி இருத்தல்; சிறுமை பெருமிதம் ஊர்ந்து விடல்= சிறுமைக்குணமாவது, அஃது இல்வழியும் அதனை ஏற்றிக்கொண்டு தருக்கின் முடிவின்கண்ணே நின்றுவிடுதல்.
உரை விளக்கம்
அளவறத் தருக்குதல் என்பதாயிற்று. விடும் என்று பாடம் ஓதுவாரும் உளர்Đ. முற்றுத்தொடரும், எழுவாய்த்தொடரும் தம்முள் இயையாமையின் அது பாடம் அன்மை உணர்க.
Đ. மணக்குடவர்.

குறள் 980 (அற்றமறைக்கும் )

[தொகு]

அற்ற மறைக்கும் பெருமை சிறுமைதான் () அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்

குற்றமே கூறி விடும். (10) குற்றமே கூறிவிடும்.

தொடரமைப்பு: பெருமை அற்றம் மறைக்கும், சிறுமைதான் குற்றமே கூறிவிடும்.

இதன்பொருள்
பெருமை அற்றம் மறைக்கும்= பெருமையுடையார் பிறர் மானத்தையே கூறி அவமானத்தை மறையாநிற்பர்; சிறுமைதான் குற்றமே கூறிவிடும்= மற்றைச் சிறுமையுடையார், பிறர் குணத்தை மறைத்துக் குற்றத்தையே கூறி விடுவர்.
உரை விளக்கம்
மறைத்தலும் கூறலும் ஏனையிடத்தும் இயைந்தன. 'அற்றம்' ஆகுபெயர். 'தான்' என்பது அசை.
இவை மூன்று பாட்டானும் இருவர் செயலும் ஒருங்கு கூறப்பட்டன.