உள்ளடக்கத்துக்குச் செல்

திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/34.நிலையாமை

விக்கிமூலம் இலிருந்து

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


பரிமேலழகர் உரை

[தொகு]

ஞானம்

[தொகு]
இனி அவற்றின் பயனாகிய ஞானங்கூறிய தொடங்கினார். ஞானமாவது வீடுபயக்கும் உணர்வு. அது நிலையாமை முதல் அவாவறுத்தல் இறுதியாக நான்கதிகாரத்துள் அடக்கப்பட்டது.

அதிகாரம் 34.நிலையாமை

[தொகு]
அதிகார முன்னுரை
அவற்றுள் நிலையாமையாவது தோற்றமுடையன யாவும் நிலையுதல் இலவாந்தன்மை. மயங்கியவழிப் பேய்தேரிற் புனல்போலத் தோன்றி, மெய்யுணர்ந்தவழிக் கயிற்றில் அரவுபோலக் கெடுதலிற் பொய்என்பாரும், நிலைவேறுபட்டு வருதலாற் கணந்தோறும் பிறந்திறக்கும்என்பாரும், ஒருவாற்றான் வேறுபடுதலும், ஒருவாற்றான் வேறுபடாமையும் உடைமையின் நிலையுதலும் நிலையாமையும் ஒருங்கே உடைய என்பாரும் எனப் பொருட்பெற்றி கூறுவார் பலதிறத்தராவர்; அவர் எல்லார்க்கும் நிலையாமை உடம்பாடாகலின்‌, ஈண்டு அதனையே கூறுகின்றார். இஃது உணர்ந்துழியல்லது பொருள்களிற் பற்று விடாதாகலின், இஃது முன் வைக்கப்பட்டது.

குறள்: 331 (நில்லாதவற்றை)

[தொகு]
நில்லாத வற்றை நிலையின வென்றுணரும்
புல்லறி வாண்மை கடை (01)
பதப்பிரிப்பு
நில்லாதவற்றை நிலையின என்று உணரும்
புல் அறிவு ஆண்மை கடை.
இதன்பொருள்
நில்லாதவற்றை நிலையின என்று உணரும் புல்லறிவாண்மை= நிலையுதல் இலவாகிய பொருள்களை நிலையுதல் உடையவென்று கருதுகின்ற புல்லறிவினை உடையராதல்; கடை= துறந்தார்க்கு இழிபு.
உரைவிளக்கம்
தோற்றம் உடையவற்றைக் கேடுஇலவென்று கருதும் புலலறிவால், அவற்றின் மேற் பற்றுச்செய்தல் பிறவித் துன்பத்திற்கு ஏதுவாகலின், அது வீடு எய்துவார்க்கு இழுக்கு என்பது இதனால் கூறப்பட்டது. இனிப் புல்லறிவாளர் பெரும்பான்மையும் பற்றுச்செய்வது சிற்றின்பத்துக்கு ஏதுவாகிய செல்வத்தின்கண்ணும் அதனை அனுபவிக்கும் யாக்கையின் கண்ணுமாகலின், வருகின்ற பாட்டுக்களான் அவற்றது நிலையாமையை விதந்து கூறுப.

குறள்: 332 (கூத்தாட்டவைக்)

[தொகு]
கூத்தாட்டவைக் குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கு மதுவிளிந் தற்று (02)
பதப்பிரிப்பு
கூத்துஆட்டு அவைக் குழாத்து அற்றே பெரும் செல்வம்
போக்கும் அது விளிந்து அற்று.
இதன்பொருள்
பெருஞ்செல்வம் கூத்தாட்டு அவை குழாத்தற்று= ஒருவன்மாட்டுப் பெரியசெல்வம் வருதல் கூத்தாடுதல் செய்கின்ற அரங்கின்கட் காண்போர்குழாம் வந்தாற்போலும்; போக்கும் அது விளி்ந்துஅற்று= அதனது போக்கும் அக்கூத்தாட்டு முடிந்தவழி அக்குழாம் போயினாற் போலும்.
உரைவிளக்கம்
'பெருஞ்செல்வம்' எனவே, துறக்கச் செல்வமும் அடங்கிற்று. 'போக்கும்' என்ற எச்சவும்மையான், வருதல் என்பது பெற்றாம். அக்குழாங் கூத்தாட்டுக் காரணமாக அரங்கின்கண் பல்திறத்தால் தானே (பஃறிறத்தாற்றானே) வந்து, அக்காரணம் போயவழித் தானும் போமாறு போல, செல்வமும் ஒருவன் நல்வினை காரணமாக அவன்மாட்டுப் பஃறிறத்தாற்றானே வந்து, அக்காரணம் போயவழித் தானும் போம் என்றதாயிற்று.

குறள்: 333 (அற்கா)

[தொகு]
அற்கா வியல்பிற்றுச் செல்வ மதுபெற்றா
லற்குப வாங்கே செயல்.
பதப்பிரிப்பு
அற்கா இயல்பிற்றுச் செல்வம் அது பெற்றால்
அற்குப ஆங்கே செயல்.
இதன்பொருள்
அற்கா இயல்பிற்றுச் செல்வம்= நில்லாத இயல்பினை உடைத்துச் செல்வம்; அது பெற்றால் அற்குப ஆங்கே செயல்= அதனைப்பெற்றால், அதனால் செய்யப்படும் அறங்களை அப்பெற்றபொழுதே செய்க.
உரைவிளக்கம்
அல்கா என்பது திரிந்துநின்றது. ஊழ்உள்ளவழியல்லது துறந்தாரால் பெறப்படாமையின் 'அது பெற்றால்' என்றும், அஃதில்வழி நில்லாமையின் 'ஆங்கே' என்றும் கூறினார். அதனால் செய்யப்படும் அறங்களாவன, பயன்நோக்காது செய்யப்படும் கடவுட் பூசையும், தானமும் முதலாயின. அவை ஞான ஏதுவாய் வீடு பயத்தலின், அவற்றை அல்குப என்றும், செய்க என்றும் கூறினார்.
இவை இரண்டு பாட்டானும் செல்வநிலையாமை கூறப்பட்டது.

குறள்: 334 (நாளென)

[தொகு]
நாளென வொன்றுபோற் காட்டி யுயிரீரும்
வாள துணர்வாற் பெறின் (04)
பதப்பிரிப்பு
நாள் என ஒன்று போல் காட்டி உயி்ர் ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின்.
இதன்பொருள்
நாள் என ஒன்றுபோல் காட்டி ஈரும் வாளது உயிர்= அறுக்கப்படுவதொரு காலவரையறைபோலத் தன்னைக் காட்டி ஈர்ந்து செல்கின்ற வாளினது வாயது உயி்ர்; உணர்வார்ப் பெறின்= அஃது உணர்வாரைப் பெறின்.
உரைவிளக்கம்
காலம் என்னும் அருவப்பொருள் உலகியல் நடத்தற்பொருட்டு ஆதித்தன் முதலிய அளவைகளாற் கூறுபட்டதாக வழங்கப்படுவதல்லது தானாகக் கூறுபாடாமையின், "நாளென ஒன்றுபோற் காட்டி" என்றும், அதுதன்னை வாள்என்று உணரமாட்டாதார் நமக்குப்பொழுது போகாநின்றதென்று இன்புறுமாறு நாளாய் மயக்கலிற் 'காட்டி' யென்றும், இடைவிடாது ஈர்தலான் வாளின்வாயது என்றும், அஃது ஈர்கின்றமையை உணர்வார் அரியராகலின் 'உணர்வார்ப் பெறின்' என்றும் கூறினார். 'உயிர்' என்னும் சாதியொருமைப்பெயர் ஈண்டு உடம்பின்மேன் நின்றது, ஈரப்படுவது அதுவேயாகலின். 'வாள்' என்பது ஆகுபெயர். இனி இதனை நாளென்பதொரு பொருள்போலத் தோன்றி உயிரையீர்வதொரு வாளாம் என்று உரைப்பாரும்உளர். 'என'வென்பது பெயரன்றி இடைச்சொல்லாகலானும், 'ஒன்று போற்காட்டி' என்பதற்கு ஒருபொருட் சிறப்பின்மையானும் 'அது' வென்பது குற்றியலுகரம் அன்மையானும், அஃதுரையன்மை அறிக.

குறள்: 335 (நாச்செற்று)

[தொகு]
நாச்செற்று விக்குண்மேல் வாராமு னல்வினை
மேற்சென்று செய்யப் படும் (05)
பதப்பிரிப்பு
நா செற்று விக்குள் மேல்வாரா முன் நல்வினை
மேல்சென்று செய்யப் படும்.
இதன்பொருள்
ஈரச்செற்று விக்குள் மேல்வாராமுன்= உரையாடா வண்ணம் நாவையடக்கி விக்குள் எழுவதற்கு முன்னே; நல்வினை மேற்சென்று செய்யப்படும்= வீட்டிற்கு ஏதுவாகிய அறம் விரைந்து செய்யப்படும்.
உரைவிளக்கம்
மேனோக்கி வருதல் ஒருதலையாகலானும், வந்துழிச் செய்தலே அன்றிச் சொல்லலும் ஆகாமையானும் 'வாராமுன்' என்றும், அதுதான் இன்னபொழுது வரும் என்பது இன்மையின் 'மேற்சென்று' என்றும் கூறினார். மேற்சேறல்- மண்டுதல்.
நல்வினை செய்யுமாற்றின்மேல் வைத்து நிலையாமை கூறியவாறு.

குறள்: 336 (நெருநல்உளன்)

[தொகு]
நெருந லுளனொருவ னின்றில்லை யென்னும்
பெருமை யுடைத்திவ் வுலகு (06)
பதப்பிரிப்பு
நெருநல் உளன் ஒருவன் இன்று இல்லை என்னும்
பெருமை உடைத்து இவ் உலகு.
இதன்பொருள்
ஒருவன் நெருநல் உளன் இன்று இல்லை என்னும் பெருமை உடைத்து= ஒருவன் நெருநல் உளனாயினான், அவனே இன்று இல்லையாயினான் என்று சொல்லும் நிலையாமை மிகுதி உடைத்து; இவ்வுலகு= இவ்வுலகம்.
உரைவிளக்கம்
ஈண்டு உண்மை பிறத்தலையும், இன்மை இறத்தலையும் உணர்த்தி நின்றன. அவை பெண்பாற்கும் உளவாயினும், சிறப்புப்பற்றி ஆண் பாற்கே கூறினார். இந்நிலையாமையே உலகின் மிக்கது என்பதாம்.

குறள்:337 (ஒருபொழுதும்)

[தொகு]
ஒருபொழுதும் வாழ்வ தறியார் கருதுப
கோடியு மல்ல பல (07)
பதப்பிரிப்பு
ஒரு பொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல.
இதன்பொருள்
ஒரு பொழுதும் வாழ்வது அறியார்= ஒருபொழுது அளவும் தம்முடம்பும் உயிரும் இயைந்திருத்தலைத் தெளியமாட்டார்; கோடியும் அல்ல பல கருதுப= மாட்டாது வைத்தும், கோடியளவுமன்றி அதனினும் பலவாய நினைவுகளை நினையாநிற்பர் அறிவிலாதார்.
உரைவிளக்கம்
இழிவுசிறப்பும்மையாற் 'பொழுது' என்பது ஈண்டுக் கணத்தின்மேல் நின்றது. காரணமாகிய வினையின் அளவே வாழ்தற்கும் அளவாகலின், அஃது அறியப்படாதாயிற்று. பலவாய நினைவுகளாவன: பொறிகளான் நுகரப்படும் இன்பங்கள் தமக்கு உரியவாமாறும், அதற்குப் பொருள் துணைக்காரணம் ஆமாறும், அது தம் முயற்சிகளான் வருமாறும், அவற்றைத் தாம் முயலுமாறும், அவற்றிற்கு வரும் இடையூறுகளும், அவற்றை நீக்குமாறும், நீக்கி அப்பொருள் கடைக்கூட்டுமாறும், அதனைப் பிறர் கொள்ளாமற் காக்குமாறும், அதனான் நட்டாரை ஆக்குமாறும், நள்ளாரை அழிக்குமாறும், தாம் அவ்வின்பங்கள் நுகருமாறும் முதலாயின. அறிவிலாரது இயல்பின்மேல் வைத்து நிலையாமை கூறியவாறு. இனிக் 'கருதுப' என்பதனை அஃறிணைப் பன்மைப் பெயராக்கி உரைப்பாரும்உளர்.

குறள்: 338 (குடம்பை)

[தொகு]
குடம்பை தனித்தொழியப் புட்பறந் தற்றே
யுடம்பொ டுயிரிடை நட்பு (08)
பதப்பிரிப்பு
குடம்பை தனித்து ஒழியப் புள் பறந்து அற்றே
உடம்பொடு உயிர் இடை நட்பு.
இதன்பொருள்
குடம்பை தனித்து ஒழியப் புள் பறந்தற்று= முன் தனியாத முட்டை தனித்துக்கிடப்ப அதன்உள் இருந்த புள்ளுப் பருவம் வந்துழிப் பறந்துபோன தன்மைத்து; உடம்பொடு உயிர்இடை நட்பு= உடம்பிற்கும் உயிர்க்கும் உளதாய நட்பு.
உரைவிளக்கம்
'தனித்தொழிய' என்றதனான், முன் தனியாமை பெற்றாம். அஃதாவது, கருவும் தானும் ஒன்றாய்ப்பிறந்து, வேறாந்துணையும் அதற்கு ஆதாரமாய் நிற்றல்; அதனால் அஃது உடம்பிற்கு உவமையாயிற்று. அதனுள் வேற்றுமையின்றி நின்றே பின் புகாமற் போகலின், 'புள்' உயிர்க்கு உவமையாயிற்று. முட்டையுட் பிறப்பன பிறவும் உளவேனும், புள்ளையே கூறினார், பறந்துபோதல் தொழிலான் உயிரோடு ஒப்புமை எய்துவது அதுவேயாகலின். 'நட்பு' என்பது ஈண்டுக் குறிப்புமொழியாய் நட்பின்றிப்போதல் உணர்த்தி நின்றது. சேதனமாய் அருவாய் நித்தமாய உயிரும், அசேதனமாய் உருவாய் அநித்தமாய உடம்பும் தம்முள் மாறாகலின், வினைவயத்தாற் கூடியதல்லது நட்புஇல என்பது அறிக. இனிக் 'குடம்பை' என்பதற்குக் கூடு என்பாரும் உளர்[1]. அது புள்ளுடன் தோன்றாமையானும், அதன்கண் அது மீண்டு புகுதல் உடைமையானும், உடம்பிற்கு உவமையாகாமை அறிக.

[1]. மணக்குடவர்.

குறள்: 339 (உறங்குவது)

[தொகு]
உறங்குவது போலுஞ் சாக்காடுறங்கி
விழிப்பது போலும் பிறப்பு (09)
பதப்பிரிப்பு
உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.
இதன்பொருள்
சாக்காடு உறங்குவது போலும்= ஒருவனுக்குச் சாக்காடு வருதல் உறக்கம் வருதலோடு ஒக்கும்; பிறப்பு உறங்கி விழிப்பது போலும்= அதன்பின் பிறப்பு வருதல் உறங்கி விழித்தல் வருதலோடு ஒக்கும்.
உரைவிளக்கம்
உறங்குதலும் விழித்தலும் உயிர்கட்கு இயல்பாய்க் கடிதின் மாறிமாறி வருகின்றாற் போலச் சாக்காடும் பிறப்பும் இயல்பாய்க் கடிதின் மாறிமாறி வரும் என்பது கருத்து[2]. நிலையாமையே நிலைபெற்றவாறு அறிவித்தற்குப் பிறப்பும் உடன்கூறப்பட்டது.

[2]மணிமேகலை, 17ஆம் காதை,வரி: 86-87..

குறள்: 340 (புக்கில்அமைந்தன்று)

[தொகு]
புக்கி லமைந்தின்று கொல்லோ வுடம்பினுட்
டுச்சி லிருந்த வுயிர்க்கு (10)
பதப்பிரிப்பு
புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பின்உள்
துச்சில் இருந்த உயிர்க்கு.
இதன்பொருள்
உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு= வாதமுதலியவற்றின் இல்லாய உடம்புகளுள் ஒதுக்கிருந்தே போந்த உயிர்க்கு; புக்கில் அமைந்தின்று கொல்லோ= எஞ்ஞான்றும் இருப்பதோர் இல் இதுகாறும் அமைந்தில்லைபோலும்!
உரைவிளக்கம்
அந்நோய்கள் இருக்கவமைந்த ஞான்று இருந்தும், வெகுண்ட ஞான்று போயும், ஓருடம்பினும் நிலைபெறாது வருதலால், 'துச்சில்இருந்த' என்றார். பின் புறப்படாது புக்கேவிடும் இல் அமைந்ததாயின், பிறர் இல்களுள் ஒதுக்கிராது என்பதாம்; ஆகவே உயிரோடு கூடிநிற்பதோர் உடம்பும் இல்லையென்பது பெறப்பட்டது.
இவை ஏழுபாட்டானும், முறையே யாக்கைகட்கு வரைந்த நாள் கழிகின்றவாறும், கழிந்தால் உளதாய நிலையாமையும், அவை ஒரோவழிப் பிறந்தவளவிலே இறத்தலும், ஒருகணமாயினும் நிற்கும் என்பது தெளியப்படாமையும், உயிர் நீங்கியவழிக் கிடக்குமாறும், அவற்றிற்குப் பிறப்பும் இறப்பும் மாறிமாறி வருமாறும், அவைதாம் உயிர்க்கு உரியஅன்மையும் என்று, இவ்வாற்றால் யாக்கை நிலையாமை கூறியவாறு கண்டுகொள்க.