திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/107.இரவச்சம்

விக்கிமூலம் இலிருந்து

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


திருக்குறள் பொருட்பால்- ஒழிபியல்[தொகு]

பரிமேலழகர் உரை[தொகு]

அதிகாரம் 107. இரவச்சம்[தொகு]

அதிகார முன்னுரை
அஃதாவது, மானந் தீர வரும் இரவிற்கு அஞ்சுதல். அதிகாரமுறைமையும் இதனானே விளங்கும்.

குறள் 1061 (கரவாது )[தொகு]

கரவா துவந்தீயுங் கண்ணன்னார் கண்ணு () கரவாது உவந்து ஈயும் கண் அன்னார் கண்ணும்

மிரவாமை கோடி யுறும். (01) இரவாமை கோடி உறும்.

தொடரமைப்பு: கரவாது உவந்து ஈயும் கண் அன்னார் கண்ணும் இரவாமை, கோடி உறும்.

இதன் பொருள்
கரவாது உவந்து ஈயும் கண் அன்னார்கண்ணும் இரவாமை= தனக்குள்ளது கரவாது இவர் வரப்பெற்றோம் என்று உண்மகிழ்ந்து கொடுக்கும் கண் போலச் சிறந்தார் மாட்டும் இரவாதே ஒருவன் வறுமை கூர்தல்: கோடி உறும்= இரந்து செல்வம் எய்தலின் கோடிமடங்கு நன்று.
உரை விளக்கம்
நல்குரவு மறைக்கப்படாத நட்டார்மாட்டும் ஆகாது என்பதுபட நின்றமையின், உம்மை உயர்வுசிறப்பின்கண் வந்தது. அவ்விரவான் மானம் தீராது என்னும் துணையல்லது, அதற்கு மிகுதி கூடாமையின், வல்லதோர் முயற்சியான் உயிர் ஓம்பலே நல்லது என்பது கருத்து.

குறள் 1062(இரந்துமுயிர் )[தொகு]

இரந்து முயிர்வாழ்தல் வேண்டிற் பரந்து () இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து

கெடுக வுலகியற்றி யான். (02) கெடுக உலகு இயற்றியான்.

தொடரமைப்பு: உலகு இயற்றியான் இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின், பரந்து கெடுக.

இதன் பொருள்
உலகு இயற்றியான், இரந்தும் உயி்ர் வாழ்தல் வேண்டின்= இவ்வுலகத்தைப் படைத்தவன் இதன்கண் வாழ்வார்க்கு முயன்று உயிர்வாழ்தலை அன்றி இரந்தும் உயிர்வாழ்தலை வேண்டி விதித்தானாயின்; பரந்து கெடுக= அக்கொடியோன் தானும் அவரைப்போன்று எங்கும் அலமந்து கெடுவானாக.
உரை விளக்கம்
மக்கள் உயிர்க்கெல்லாம் வாழ்நாளும், அதற்கு வேண்டுவதாய உண்டியும், அதற்கு ஏதுவாய செய்தொழிலும், பழவினை வயத்தாற் கருவொடு கலந்த அன்றே அவன் கற்பிக்கும் அன்றே? அவற்றுள் சில உயிர்க்கு இரத்தலையும், ஒரு செய்தொழிலாகக் கற்பித்தான் ஆயின், அத்தீவினையால் தானும் அத்துன்பமுறல் வேண்டும் என்பதாம்.
இவை இரண்டு பாட்டானும் அவ்விரவின் கொடுமை கூறப்பட்டது.

குறள் 1063 (இன்மையிடும் )[தொகு]

இன்மை யிடும்பை யிரந்துதீர் வாமென்னும் () இன்மை இடும்பை இரந்து தீர்வாம் என்னும்

வன்மையின் வன்பாட்ட தில். (03) வன்மையின் வன்பாட்டது இல்.

தொடரமைப்பு: இன்மை இடும்பை இரந்து தீர்வாம் என்னும் வன்மையின், வன்பாட்டது இல்.

இதன் பொருள்
இன்மை இடும்பை இரந்து தீர்வாம் என்னும் வன்மையின்= வறுமையான் வரும் துன்பத்தை முயன்று நீக்கக் கடவேம் என்று கருதாது இரந்து நீக்கக் கடவேம் என்று கருதும் வன்மை போல;
வன்பாட்டது இல்= வலிமைப்பாடுடையது பிறிது இல்லை.
உரை விளக்கம்
நெறியாய முயற்சி நிற்க, நெறியல்லாத இரவால் தீர்க்கக் கருதுதலின், வன்மையாயிற்று. வன்பாடு- முருட்டுத்தன்மை. அஃதாவது, ஓராது செய்து நிற்றல்.
இதனான் வறுமை தீர்தற்கு நெறி இரவன்று என்று கூறப்பட்டது.

குறள் 1064 (இடமெல்லாங் )[தொகு]

இடமெல்லாங் கொள்ளாத் தகைத்தே யிடமில்லாக் () இடம் எல்லாம் கொள்ளாத் தகைத்தே இடம் இல்லாக்

காலு மிரவொல்லாச் சால்பு. (04) காலும் இரவு ஒல்லாச் சால்பு.

தொடரமைப்பு: இடம் இல்லாக்காலும் இரவு ஒல்லாச் சால்பு, இடம் எல்லாம் கொள்ளாத் தகைத்தே.

இதன் பொருள்
இடம் இல்லாக் காலும் இரவு ஒல்லாச் சால்பு= நுகரவேண்டுவன இன்றி நல்கூர்ந்த வழியும், பிறர்பால் சென்று இரத்தலை உடம்படாத அமைதி;
இடம் எல்லாம் கொள்ளாத் தகைத்தே= எல்லா உலகும் ஒருங்கு இயைந்தாலும், கொள்ளாத பெருமை உடைத்து.
உரை விளக்கம்
அவ்விரத்தலைச் சால்பு விலக்குமாகலின், இரவு ஒல்லாமை அதன்மேல் ஏற்றப்பட்டது.
இதனான் அந்நெறியல்லதனைச் சால்புடையார் செய்யார் என்பது கூறப்பட்டது.

குறள் 1065 (தெண்ணீரடு )[தொகு]

தெண்ணீர் அடுபுற்கை யாயினுந் தாடந்த () தெள் நீர் அடு புற்கை ஆயினும் தாள் தந்தது

துண்ணலி னூங்கினிய தில். (05) உண்ணலின் ஊங்கு இனியது இல்.

தொடரமைப்பு: தாள் தந்தது தெண்ணீர் அடு புற்கை ஆயினும், உண்ணலின் ஊங்கு இனியது இல்.

இதன் பொருள்
தாள் தந்தது தெண்ணீர் அடுபுற்கை ஆயினும்= நெறியாய முயற்சி கொடுவந்து தந்தது தெளிந்த நீர்போலும் அடுபுற்கையே ஆயினும்;
உண்ணலின் ஊங்கு இனியது இல்= அதனை உண்டற்குமேல் இனியது இல்லை.
உரை விளக்கம்
தாள் தந்த கூழ் செறிவின்றித் தண்ணீர் போன்றதாயினும், இழிவாய இரவான் வந்தது அன்றித் தம் உடைமையாகலின், அமிழ்தத்தோடு ஒக்கும் என்பதாம்.
இதனால் நெறியினான் ஆயது சிறிதேனும் அது செய்யும் இன்பம் பெரிது என்பது கூறப்பட்டது.

குறள் 1066(ஆவிற்கு )[தொகு]

ஆவிற்கு நீரென் றிரப்பினு நாவிற் () ஆவிற்கு நீர் என்று இரப்பினும் நாவிற்கு

கிரவி னிளிவந்த தில். (06) இரவின் இளி வந்தது இல்.

தொடரமைப்பு: ஆவிற்கு நீர் என்று இரப்பினும், இரவின் நாவற்கு இளி வந்தது இல்.

இதன் பொருள்
ஆவிற்கு நீர் என்று இரப்பினும்= தண்ணீர் பெறாது இறக்கும் நிலைமைத்தாயதோர் ஆவினைக் கண்டு அறன் நோக்கி இதற்குத் தண்ணீர் தரல்வேண்டும் என்று இரந்து சொல்லுங்காலும்;
இரவின் நாவிற்கு இளி வந்தது இல்= அவ்விரவு போல ஒருவன் நாவிற்கு இளிவந்தது பிறிது இல்லை.
உரை விளக்கம்
ஆ காத்தோம்பல் பேரறம் ஆகலின், 'ஆவிற்கு' என்றும், பொருள் கொடுத்துக் கொள்ளவேண்டாத எண்மைத்து ஆகலின், 'நீர்' என்றும், இரக்கின்றானுக்கு இளிவு அச்சொல்லளவே ஆகலின், 'நாவிற்கு' என்றும், அதுதான் எல்லா இளிவினும் மேற்படுதலின், 'இளிவந்தது இல்' என்றும் கூறினார்.
இதனான் அறனும் முயன்று செய்வது அல்லது, இரந்து செய்யற்க என்பது கூறப்பட்டது.

குறள் 1067 (இரப்பன் )[தொகு]

இரப்ப னிரப்பாரை யெல்லா மிரப்பிற் () இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்

கரப்பா ரிரவன்மி னென்று. (07) கரப்பாரை இரவன்மின் என்று.

தொடரமைப்பு: இரப்பாரை எல்லாம் இரப்பன், இரப்பின் கரப்பார் இரவன்மின் என்று.

இதன் பொருள்
இரப்பாரை எல்லாம் இரப்பன்= இரப்பாரை எல்லாம் யான் இரவாநின்றேன்;
இரப்பின் கரப்பார் இரவன்மின் என்று= யாது சொல்லி எனின், நுமக்கு இரக்கவேண்டுமாயின் தமக்கு உள்ளது கரப்பாரை இரவாது ஒழிமின் என்று சொல்லி.
உரை விளக்கம்
இரண்டாவது விகாரத்தான் தொக்கது. இவ்விளிவந்த செயலான் ஊட்டியவழியும், உடம்பு நில்லாதாகலின், இது வேண்டா என்பது தோன்ற, 'இரப்பன்' என்றார்.
இதனான் மானந்தீர வரும் இரவு விலக்கப்பட்டது.

குறள் 1068 (இரவென்னு )[தொகு]

இரவென்னு மேமாப்பி றோணி கரவென்னும் () இரவு என்னும் ஏமாப்பு இல் தோணி கரவு என்னும்

பார்தாக்கப் பக்கு விடும். (08) பார் தாக்கப் பக்கு விடும்.


தொடரமைப்பு: இரவு என்னும் ஏமாப்பு இல் தோணி, கரவு என்னும் பார் தாக்கப் பக்கு விடும்.

இதன் பொருள்
இரவு என்னும் ஏமாப்பு இல் தோணி= இவ்வறுமை என்னும் கடலை இதனான் கடத்தும் என்று கருதி, ஒருவன் ஏறிய இரவு என்னும் சேமம் அற்ற தோணி;
கரவு என்னும் பார்தாக்கப் பக்கு விடும்= அதன்கண் ஓடுங்கால், கரத்தல் என்னும் வன்னிலத்தோடு தாக்குமாயின், பிளந்துபோம்.
உரை விளக்கம்
முயற்சியான் கடப்பதனை, இரவான் கடக்கலுற்றான் அதன் கரை காணாமையின், 'ஏமாப்பில் தோணி' என்றார். ஏமாப்பின்மை தோணிமேல் ஏற்றப்பட்டது. அது கடத்தற்கு ஏற்ற தன்மையானும், நிலம் அறியாது செலுத்தியவழி உடைதலானும், அதன்கண் ஏறற்க என்பதாம்; இஃது அவயவ உருவகம்.

குறள் 1069(இரவுள்ள )[தொகு]

இரவுள்ள வுள்ள முருகுங் கரவுள்ள () இரவு உள்ள உள்ளம் உருகும் கரவு உள்ள

வுள்ளதூஉ மின்றிக் கெடும். (09) உள்ளதூஉம் இன்றிக் கெடும்.

தொடரமைப்பு: இரவு உள்ள உள்ளம் உருகும், கரவு உள்ள உள்ளதூஉம் இன்றிக் கெடும்.

இதன் பொருள்
இரவு உள்ள உள்ளம் உருகும்= உடையார் முன் இல்லார் சென்று இரந்து நிற்றலின் கொடுமையை நினைந்தால் எம் உள்ளம் கரைந்து உருகாநிற்கும்;
கரவு உள்ள உள்ளதூஉம் இன்றிக் கெடும்= இனி, அந்நிலையைக் கண்டுவைத்தவர் இல்லையென்றலின் கொடுமையை நினைந்தால், அவ்வுருகும் அளவுதானும் இன்றிப் பொன்றி விடும்.
உரை விளக்கம்
"இரவினை உள்ளுங்கால் உள்ளம் உருகுமால் என்கொலோ, கொள்ளுங்கால் கொள்வார் குறிப்பு"1 என்றார் பிறரும். இரவினும் கரவு கொடிது என்பதாம். இதற்குப் பிறர் எல்லாம்2 இரக்கின்றவர் உள்ளம் உருகும் என்று உரைத்தார்.
1. நாலடியார், 305.
2. மணக்குடவர்.

குறள் 1070 (கரப்பவர்க்கி )[தொகு]

கரப்பவர்க் கியங்கொளிக்குங் கொல்லோ விரப்பவர் () கரப்பவர்க்கு யாங்கு ஒளிக்கும் கொல்லோ இரப்பவர்

சொல்லாடப் போஒ முயிர். (10) சொல் ஆடப் போஒம் உயிர்.

தொடரமைப்பு: சொல்லாட இரப்பவர் உயிர் போஒம், கரப்பவர்க்கு யாங்கு ஒளிக்கும் கொல்.

இதன் பொருள்
சொல்லாட இரப்பவர் உயிர் போஒம்= கரப்பார் இல்லை என்று சொல்லாடிய துணையானே இரப்பார்க்கு உயிர் போகாநின்றது; :கரப்பவர்க்கு யாங்கு ஒளிக்குங் கொல்= இனிச் சொல்லாடுகின்ற அவர்தமக்கு உயிர் பின்னும் நிற்றலான், அப்பொழுது எப் புரையுள் புக்கு ஒளி்த்து நிற்கும்.
உரை விளக்கம்
உயிர்போகலாவது, இனி யாம் என் செய்தும் என்று ஏங்கிச் செயலற்று நிற்றல். "அந்நிலையே, மாயானோ மாற்றி விடின்"3 என்றார் பிறரும். கேட்டாரைக் கொல்லவற்றாய சொல் சொல்வாரைக் கோறல் சொல்ல வேண்டாவாயினும் அது காண்கின்றிலம், இஃது என்னோ என்பதாம். வறுமையுற்றுழி மறையாது இரக்கப்படுவாராய கேளிர்கட்கும், அதனைச் சொல்லாட உயிர்போம். ஆனபின் மறைக்கப்படுவாராய பிறர்க்குச் சொல்லாடியக்கால் போகாது எங்கே ஒளித்துநிற்கும்; இரண்டானும் போமே அன்றோ என இரவு அஞ்சினான் ஒருவன் கூற்றாக்கி உரைப்பாரும் உளர்4.
இவை மூன்று பாட்டானும், அவ்விரவின் குற்றமும் கரவின் குற்றமும் ஒருங்கு கூறப்பட்டன.
3. நாலடியார், 308.
4. மணக்குடவர்.