உள்ளடக்கத்துக்குச் செல்

திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/39.இறைமாட்சி

விக்கிமூலம் இலிருந்து

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


1. அரசியல்

[தொகு]

பரிமேலழகரின் 'இயல்' முன்னுரை:

இனி, இல்லறத்தின் வழிப்படுவனவாய பொருள் இன்பங்களுள், இருமையும் பயப்பதாய பொருள் கூறுவான் எடுத்துக்கொண்டார்.
அது, தன் துணைக்காரணமாய 'அரசநீதி' கூறவே அடங்கும்.
அரசநீதியாவது, காவலை நடாத்தும் முறைமை.
அதனை அரசியல், அங்கவியல், ஒழிபியல் என மூவகைப்படுத்து, மலர்தலை உலகிற்கு உயிர் எனச்சிறந்த அரசனது இயல்பு இருபத்தைந்து அதிகாரத்தான் கூறுவான் தொடங்கி, முதற்கண் இறைமாட்சி கூறுகின்றார்.

அதிகாரம்: 39 இறைமாட்சி

[தொகு]

பரிமேலழகரின் அதிகார முன்னுரை:

அஃதாவது, அவன்தன் நற்குண நற்செய்கைகள். உலகபாலர் உருவாய் நின்று உலகம் காத்தலின், 'இறை` என்றார். "திருவுடை மன்னரைக்காணில் திருமாலைக்கண்டேனே யென்னும்" (திருவாய்மொழி, பதிகம் 34: பாசுரம். 08) என்று பெரியாரும் பணித்தார்.

திருக்குறள்: 381 (படைகுடி)

[தொகு]
படைகுடி கூழமைச்சு நட்பர ணாறு // // படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் ஆறும்
முடையா னரசரு ளேறு. (01) // // உடையான் அரசருள் ஏறு.

பரிமேலழகர் உரை::

படைகுடிகூழ் அமைச்சு நட்பு அரண் ஆறும் உடையான்= படையும், குடியும் கூழும் அமைச்சும் நட்பும் அரணும் என்று சொல்லப்பட்ட ஆறு அங்கங்களையும் உடையவன்;
அரசருள் ஏறு= அரசருள் ஏறு போல்வான் என்றவாறு.

பரிமேலழகர் விளக்கம்:

ஈண்டுக் 'குடி' என்றது, அதனையுடைய நாட்டினை. 'கூழ்' என்றது, அதற்கு ஏதுவாய பொருளை. அமைச்சு, நாடு, அரண், பொருள், படை, நட்பு என்பதே முறையாயினும் ஈண்டுச் செய்யுள் நோக்கிப் பிறழவைத்தார், 'ஆறும் உடையான்' என்றதனால், அவற்றுள் ஒன்று இல்வழியும், அரசநீதி செல்லாது என்பது பெற்றாம். வடநூலார் இவற்றிற்கு 'அங்கம்' எனப் பெயர் கொடுத்ததூஉம் அது நோக்கி. 'ஏறு' என்பது உபசார வழக்கு.

இதனால், அரசற்கு அங்கமாவன இவை என்பதூஉம், இவை முற்றும் உடைமையே அவன் வெற்றிக்கு ஏது என்பதூஉம் கூறப்பட்டன.

திருக்குறள்: 382 (அஞ்சாமை)

[தொகு]
அஞ்சாமை யீகையறி வூக்க மிந்நான்கு // அஞ்சாமை ஈகை அறிவு ஊக்கம் இந்நான்கும்
மெஞ்சாமை வேந்தற் கியல்பு. (02) // எஞ்சாமை வேந்தற்கு இயல்பு.

பரிமேலழகர் உரை:

வேந்தற்கு இயல்பு- அரசனுக்கு இயல்பாவது;
அஞ்சாமை ஈகை அறிவு ஊக்கம் இந்நான்கும் எஞ்சாமை- திண்மையும் கொடையும் அறிவும் ஊக்கமும் என்னும் இந்நான்கு குணமும் இடைவிடாது நிற்றல் என்றவாறு.

பரிமேலழகர் விளக்கம்:

ஊக்கம், வினை செய்தற்கண் மனஎழுச்சி. இவற்றுள் அறிவு ஆறு அங்கத்திற்கும் உரித்து; ஈகை படைக்குரித்து; ஏனைய வினைக்கு உரிய. உயிர்க்குணங்களுள் ஒன்று தோன்ற ஏனைய அடங்கி வரும்; அவற்றுள் இவை அடங்கின், அரசற்குக் கெடுவன பலவாமாகலின், இவை எப்போதும் தோன்றிநிற்றல் வேண்டும் என்பார், 'எஞ்சாமை வேந்தற்கு இயல்பு' என்றார்.

திருக்குறள்: 383 (தூங்காமை)

[தொகு]
தூங்காமை கல்வி துணிவுடைமை யிம்மூன்றும் // தூங்காமை கல்வி துணிவு உடைமை இம் மூன்றும்
நீங்கா நிலனாள் பவற்கு. (03) // // நீங்கா நிலன் ஆள்பவற்கு.

பரிமேலழகர் உரை

நிலன் ஆள்பவற்கு- நிலத்தினை ஆளும் திருவுடையாற்கு;
தூங்காமை கல்வி துணிவுடைமை இம் மூன்றும் நீங்கா- அக்காரியங்களில் விரைவுடைமையும், அவை அறிதற்கு ஏற்ற கல்வி உடைமையும், ஆண்மை உடைமையும் ஆகிய இம்மூன்று குணமும் ஒருகாலும் நீங்கா என்றவாறு.

பரிமேலழகர் விளக்கம்:

கல்வியது கூறுபாடு பின்னர்க் கூறப்படும். ஆண்மையாவது, ஒன்றனையும் பாராது கடிதிற் செய்வது ஆதலின் அஃது ஈண்டு உபசார வழக்கால் துணிவு எனப்பட்டது.உம்மை இறந்தது தழீஇய எச்சவும்மை. இவற்றுள் கல்வி ஆறங்கத்திற்கும் உரித்து; ஏனைய வினைக்கு உரிய; 'நீங்கா' என்பதற்கு மேல் எஞ்சாமைக்கு உரைத்தாங்கு உரைக்க.

திருக்குறள்: 384 (அறனிழுக்கா)

[தொகு]
அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா // அறன் இழுக்காது அல்லவை நீக்கி மறன் இழுக்கா
மான முடைய தரசு.(04) // // மானம் உடையது அரசு.
பரிமேலழகர் உரை:
அறன் இழுக்காது = தனக்கு ஓதிய அறத்தின் வழுவாது ஒழுகி;
அல்லவை நீக்கி = அறன் அல்லவை தன் நாட்டின் கண்ணும் நிகழாமல் கடிந்து;
மறன் இழுக்கா மானம் உடையது அரசு = வீரத்தின் வழுவாத தாழ்வின்மையினை உடையான் அரசன் என்றவாறு.
பரிமேலழகர் விளக்கம்:

அவ்வறமாவது, ஓதல் வேட்டல் ஈதல் என்னும் பொதுத்தொழிலினும், படைக்கலம் பயிறல், பல்லுயிர் ஓம்பல், பகைத்திறம் தெறுதல் என்னும் சிறப்புத்தொழிலினும் வழுவாது நிற்றல். "மாண்ட அறநெறி முதற்றே அரசின் கொற்றம்"(புறநானூறு- 55) என்பதனால், இவ்வறம் பொருட்குக் காரணமாதல் அறிக. அல்லவை, கொலை களவு முதலாயின. குற்றமாய மானத்தின் நீக்குதற்கு, 'மறன் இழுக்கா மானம்' என்றார். அஃதாவது,

"வீறின்மையின் விலங்காம்என மதவேழமும் எறியான்
ஏறுண்டவர் நிகராயினும் பிறர்மிச்சில்என்(று) எறியான்
மாறன்மையின் மறம்வாடும்என்(று) இளையாரையும் எறியான்
ஆறன்மையின் முதியாரையும் எறியான்அயில் உழவன்" (சீவக சிந்தாமணி-2261) எனவும்,
"அழியுநர் புறக்கொடை அயில்வேல் ஓச்சான்"(புறப்பொருள் வெண்பா மாலை- 55) எனவும் சொல்லப்படுவது.
அரசு-அரசனது தன்மை; அஃது உபசாரவழக்கால் அவன்றன் மேல் நின்றது.

திருக்குறள்: 385 (இயற்றலும்)

[தொகு]
"இயற்றலு மீட்டலுங் காத்தலுங் காத்த // "இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு". (05) // // வகுத்தலும் வல்லது அரசு".
பரிமேலழகர் உரை:
இயற்றலும் = தனக்குப் பொருள்கள் வரும் வழிகளை மேன்மேல் உளவாக்கலும்:
ஈட்டலும் = அங்ஙனம் வந்தவற்றை ஒருவழித் தொகுத்தலும்;
காத்தலும் = தொகுத்தவற்றைப் பிறர் கொள்ளாமல் காத்தலும்;
காத்த வகுத்தலும் = காத்தவற்றை அறம் பொருள் இன்பங்களின் பொருட்டு விடுத்தலும்;
வல்லது அரசு = வல்லவனே அரசன் என்றவாறு.
பரிமேலழகர் விளக்கம்:
ஈட்டல், காத்தல், வகுத்தல் என்றவற்றிற்கு ஏற்ப இயற்றல் என்பதற்குச் செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது.
பொருள்களாவன: மணி, பொன், நெல் முதலாயின.
அவை வரும் வழிகளாவன: பகைவரை அழித்தலும், திறை கோடலும், தன் நாடு தலையளித்தலும் முதலாயின.
பிறர் என்றது பகைவர், கள்வர், சுற்றத்தார், வினைசெய்வார் முதலாயினாரை.
கடவுளர், அந்தணர், வறியோர் என்ற இவர்க்கும், புகழிற்கும் கொடுத்தலை அறப்பொருட்டாகவும்,
யானை குதிரை படை நாடு அரண் என்று இவற்றிற்கும், பகையொடு கூடலின் பிரிக்கப்படுவார்க்கும், தன்னிற் பிரிதலின் கூட்டப்படுவார்க்கும் கொடுத்தலைப் பொருட் பொருட்டாகவும்,
மண்டபம், வாவி, செய்குன்று, இளமரக்கா முதலிய செய்தற்கும், ஐம்புலன்களான் நுகர்வனவற்றிற்கும் கொடுத்தலை இன்பப்பொருட்டாகவும் கொள்க.
இயற்றல் முதலிய தவறாமற் செய்தல் அரிதாகலின், 'வல்லது' என்றார்.
இவை நான்கு பாட்டானும் மாட்சியே கூறப்பட்டது.

திருக்குறள்: 386 (காட்சிக்கெளியன்)

[தொகு]
காட்சிக் கெளியன் கடுஞ்சொல்ல னல்லனேல் // காட்சிக்கு எளியன் கடும் சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம். (6) // // மீ கூறும் மன்னன் நிலம்.
பரிமேலழகர் உரை:
காட்சிக்கு எளியன்= முறைவேண்டினார்க்கும் குறைவேண்டினார்க்கும் காண்டற்கு எளியனாய்;
கடுஞ்சொல்லன் அல்லனேல்= யாவர்மாட்டும் கடுஞ்சொல்லன் அல்லனுமாயின்;
மன்னன் நிலம் மீக்கூறும்= அம்மன்னனது நிலத்தை எல்லா நிலங்களினும் உயர்த்துக்கூறும் 'உலகம்' என்றவாறு.
பரிமேலழகர் உரை விளக்கம்:
முறைவேண்டினார், வலியரால் நலிவெய்தினார்.
குறைவேண்டினார், வறுமையுற்று இரந்தார்.
காண்டற்கு எளிமையாவது, பேரத்தாணிக்கண் அந்தணர், சான்றோர் உள்ளிட்டாரோடு செவ்வியுடையனாயிருத்தல்.
கடுஞ்சொல், கேள்வியினும் வினையினும் கடியவாய சொல்.
நிலத்தை மீக்கூறும் எனவே, மன்னனை மீக்கூறுதல் சொல்லவேண்டாவாயிற்று.
மீக்கூறுதல், இவன் காக்கின்ற நாடு பசிபிணி பகை முதலிய இன்றி, யாவர்க்கும் பேரின்பம் தருதலின் தேவருலகினும் நன்று என்றல்.
'உலகம்' என்னும் எழுவாய் வருவிக்கப்பட்டது.

திருக்குறள்: 387 (இன்சொலால்)

[தொகு]
இன்சொலா லீத்தளிக்க வல்லாற்குத் தன்சொலாற்/ இன்சொலால் ஈத்துஅளிக்க வல்லாற்கு தன்சொலால்
றான்கண் டனைத்திவ் வுலகு. (07) // // தான் கண்டனைத்து இவ் உலகு.
பரிமேலழகர் உரை:
இன்சொலால் ஈத்து அளிக்க வல்லாற்கு= இனிய சொல்லுடனே ஈதலைச் செய்து அளிக்கவல்ல அரசனுக்கு;
இவ்வுலகு தன் சொலால் தான் கண்டனைத்து= இவ்வுலகம் தன் புகழோடு மேவித் தான் கருதிய அளவிற்றாம் என்றவாறு.
பரிமேலழகர் உரை விளக்கம்:
இன்சொல், கேள்வியினும் வினையினும் இனியவாய சொல்;
ஈதல், வேண்டுவார்க்கு வேண்டுவன கொடுத்தல்;
அளித்தல், தன் பரிவாரத்தானும் பகைவரானும் நலிவுபடாமல் காத்தல்;
இவை அரியவாகலின் 'வல்லாற்கு' என்றும், அவன் மண் முழுதும் ஆளுமாகலின் 'இவ்வுலகு' என்றும் கூறினார்.
கருதிய அளவிற்றாதல், கருதிய பொருள் எல்லாம் சுரத்தல்.

திருக்குறள்: 388 (முறைசெய்து)

[தொகு]
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட் // முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
கிறையென்று வைக்கப் படும். (08) // // // இறை என்று வைக்கப்படும்.
பரிமேலழகர் உரை:
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன்= தான் முறைசெய்து, பிறர் நலியாமல் காத்தலையும் செய்யும் அரசன்;
மக்கட்கு இறை என்று வைக்கப்படும்= பிறப்பான் மகனேயாயினும் செயலான் மக்கட்குக் கடவுள் என்று வேறு வைக்கப்படும் என்றவாறு.
பரிமேலழகர் உரை விளக்கம்:
முறை, அறநூலும் நீதிநூலும் சொல்லும் நெறி.
பிறர், என்றது மேற் சொல்லியாரை.
வேறுவைத்தல், மக்களிற் பிரித்து உயர்த்து வைத்தல்.

திருக்குறள்: 389 (செவிகைப்ப)

[தொகு]
செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்/ செவி கைப்ப சொல்பொறுக்கும்பண்புஉடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கு முலகு. (09) // // கவிகை கீழ் தங்கும் உலகு.
பரிமேலழகர் உரை:
சொல் செவி கைப்பப் பொறுக்கும் பண்பு உடை வேந்தன்= இடிக்கும் துணையாயினார் சொற்களைத் தன் செவி பொறாதாகவும், விளைவு நோக்கிப் பொறுக்கும் பண்புடைய அரசனது;
கவிகைக் கீழ்த் தங்கும் உலகு= குடை நிழற்கண்ணே தங்கும் உலகம் என்றவாறு.
பரிமேலழகர் உரை விளக்கம்:
செவிகைப்ப என்பதற்கேற்ப இடிக்கும் துணையார் என்பது வருவிக்கப்பட்டது.
நாவின்புலத்தைச் செவிமேல் ஏற்றிக் கைப்ப என்றார்.
பண்புடைமை விசேட உணர்வினன் ஆதல்.
அறநீதிகளில் தவறாமையின் மண்முழுதும் தானே ஆளும் என்பதாம்.

திருக்குறள்: 390 (கொடையளி)

[தொகு]
"கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும் // // கொடை அளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி". (390) // // உடையானாம் வேந்தர்க்கு ஒளி.
பரிமேலழகர் உரை:
கொடை= வேண்டுவார்க்கு வேண்டுவன கொடுத்தலும்;
அளி= யாவர்க்கும் தலையளி செய்தலும்;
செங்கோல்= முறை செய்தலும்;
குடி ஓம்பல்= தளர்ந்த குடிகளைப் பேணலும் ஆகிய;
நான்கும் உடையான்= இந்நான்கு செயலையும் உடையவன்;
வேந்தர்க்கு ஒளியாம்= வேந்தர்க்கு எல்லாம் விளக்காம் என்றவாறு.
பரிமேலழகர் உரை விளக்கம்:
தலையளி, முகமலர்ந்து இனிய கூறல்.
செவ்விய கோல் போறலின் செங்கோல் எனப்பட்டது.
குடியோம்பல் என எடுத்துக் கூறினமையால் தளர்ச்சி பெற்றாம்; அஃதாவது, ஆறில் ஒன்றாய பொருள்தன்னையும் வறுமை நீங்கியவழிக் கொள்ளல் வேண்டின் அவ்வாறு கோடலும், இழத்தல் வேண்டின் இழத்தலுமாம்.
சாதி முழுதும் விளக்கலின், விளக்கு என்றார். ஒளி ஆகுபெயர்.
இவை ஐந்து பாட்டானும் மாட்சியும் பயனும் உடன் கூறப்பட்டன.

திருக்குறள் என்றழைக்கப்பெறும் முப்பால் நூலின், பொருட்பால் இறைமாட்சி அதிகாரமும், அதற்குப் பரிமேலழகர் எழுதிய உரையும் முற்றுப்பெற்றன.