உள்ளடக்கத்துக்குச் செல்

திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/51.தெரிந்துதெளிதல்

விக்கிமூலம் இலிருந்து

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


திருக்குறள் பொருட்பால்- 1. அரசியல்- அதிகாரம் 51. தெரிந்துதெளிதல்

[தொகு]

பரிமேலழகர் உரை

[தொகு]

அதிகார முன்னுரை: அஃதாவது, அமைச்சர் முதலாயினாரைப் பிறப்பு குணம் அறிவு என்பனவற்றையும், செயலையும் காட்சி கருத்து ஆகமம் என்னும் அளவைகளான் ஆராய்ந்து தெளிதல். வலிமுதன் மூன்றும் அறிந்து பகைமேற் செல்வானுக்குத் தானே வினையுற்றுச் செய்தற்பொருட்டும், அறைபோகாமற் பொருட்டும் இது வேண்டுதலின், அவற்றின்பின் வைக்கப்பட்டது.

குறள் 501 (அறம்பொரு)

[தொகு]

அறம்பொரு ளின்ப முயிரச்ச நான்கின்அறம் பொருள் இன்பம் உயிர் அச்சம் நான்கின்

'றிறந்தெரிந்து தேறப் படும். (01)'திறம் தெரிந்து தேறப் படும்.

இதன்பொருள்
அறம் பொருள் இன்பம் உயிர் அச்சம்= அரசனால் தெளியப்படுவான்ஒருவன், அறமும் பொருளும் இன்பமும் உயிர்ப்பொருட்டான் வரும் அச்சமும் என்னும்; நான்கின் திறம் தெரிந்து தேறப்படும்- உபதை நான்கின் திறத்தான் மனவியல்பு ஆராய்ந்தால் பின்பு தெளியப்படும்.
உரைவிளக்கம்
அவற்றுள், அற உபாதையாவது: புரோகிதரையும் அறவோரையும் விட்டு, அவரால் இவ்வரசன் அறவோன் அன்மையின் இவனைப்போக்கி அறனும் உரிமையும் உடையான் ஒருவனை வைத்தற்கு எண்ணினம்; இதுதான் யாவர்க்கும் இயைந்தது; நின் கருத்து என்னை? எனச் சூளுறவோடு சொல்லுவித்தல்.
பொருள் உபாதையாவது: சேனைத்தலைவனையும், அவனோடு இயைந்தாரையும் விட்டு, அவரான் இவ்வரசன் இவறன்மாலையன் ஆகலின் இவனைப்போக்கிக் கொடையும் உரிமையும் உடையான் ஒருவனை வைத்தற்கு எண்ணினம்; இதுதான் யாவர்க்கும் இயைந்தது; நின்கருத்து என்னை? எனச் சூளுறவோடு சொல்லுவித்தல்.
இன்ப உபாதையாவது: தொன்றுதொட்டு உரிமையொடு பயின்றாள் ஒரு தவமுதுமகளை விட்டு, அவளால், உரிமையுள் இன்னாள் நின்னைக் கண்டு வருத்தமுற்றுக் கூட்டுவிக்க வேண்டுமென்று என்னை விடுத்தாள்; அவளைக் கூடுவையாயின், நினக்குப் பேரின்பமேயன்றிப் பெரும் பொருளும் கைகூடுமெனச் சூளுறவோடு சொல்லுவித்தல்.
அச்ச உபாதையாவது: ஒரு நிமித்தத்தின் மேலிட்டு ஓரமைச்சனால் ஏனையோரை அவன் இல்லின்கண் அழைப்பித்து, இவர் அறைபோவான் எண்ணற்குக் குழீஇயினார் என்று தான்காவல்செய்து, ஒருவனால் இவ்வரசன் நம்மைக் கொல்வான் சூழ்கின்றமையின், அதனை நாம் முற்படச் செய்து, நமக்கு இனிய அரசன் ஒருவனை வைத்தல் ஈண்டை யாவர்க்கும் இயைந்தது; நின்கருத்து என்னை? எனச் சூளுறவோடு சொல்லுவித்தல். இந்நான்கினும் திரிபு இலனாயவழி எதிர்காலத்துந் திரிபிலன் எனக் கருத்தளவையால் தெளியப்படும் என்பதாம். இவ்வடநூற் பொருண்மையை உட்கொண்டு இவர் ஓதியது அறியாது, பிறர் எல்லாம் இதனை உயிரெச்சம் எனப் பாடந்திரித்துத் தத்தமக்குத் தோன்றியவாறே உரைத்தார்.

குறள் 502 (குடிப்பிறந்து)

[தொகு]

குடிப்பிறந்து குற்றத்தி னீங்கி வடுப்பரியுகுடிப் பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப் பரியும்

'நாணுடையான் கட்டே தெளிவு. (02)'நாண் உடையான் கட்டே தெளிவு.

இதன்பொருள்
குடிப்பிறந்து= உயர்ந்த குடியிற் பிறந்து; குற்றத்தின் நீங்கி= குற்றங்களினின்று நீங்கி; வடுப் பரியும் நாண் உடையான் கட்டே தெளிவு= நமக்கு வடு வருங்கொல் என்று அஞ்சாநிற்கும் நாண் உடையவன்கண்ணதே அரசனது தெளிவு.
உரைவிளக்கம்
குற்றங்களாவன: மேல் அரசனுக்குச் சொல்லிய வகை ஆறும் (குறள்:431 செருக்கு, சினம், காமம்; குறள்:432 இவறல், மாண்பு இறந்த மானம், அளவிறந்த உவகை), மடி, மறப்பு, பிழைப்பு என்று இவை முதலாயவுமாம். நாண், இழிதொழில்களின் மனம் செல்லாமை. இவை பெரும்பான்மையும் தக்கோர்வாய்க் கேட்டலாகிய ஆகம அளவையான் தெரிவன. இந்நான்கும் உடையவனையே தெளிக என்பதாம்.

குறள் 503 (அரியகற்)

[தொகு]

'அரியகற் றாசற்றார் கண்ணுந் தெரியுங்கா'அரிய கற்று ஆசு அற்றார் கண்ணும் தெரியுங்கால்

'லின்மை யரிதே வெளிறு. (03)'இன்மை அரிதே வெளிறு.

இதன்பொருள்
அரிய கற்று ஆசு அற்றார் கண்ணும்= கற்றற்கு அரிய நூல்களைக் கற்று மேற்சொல்லிய குற்றங்கள் அற்றார் மாட்டும்; தெரியுங்கால் வெளிறு இன்மை அரிது= நுண்ணிதாக ஆராயும் இடத்து வெண்மை இல்லாமை அரிது.
உரைவிளக்கம்
வெண்மை- அறியாமை; அஃது இவர்மாட்டு உளதாவது, மனத்தது நிலையாமையான் ஒரோவழி ஆகலின், 'தெரியுங்கால்' என்றார். காட்சிஅளவையான் தெரிந்தால் அதுவும் இல்லாதாரே தெளியப்படுவர் என்பது குறிப்பெச்சம். இவ்வளவைகளான் இக்குணமும் குற்றமும் தெரிந்து, குணமுடையாரைத் தெளிக என்பது இவை மூன்று பாட்டானும் கூறப்பட்டது.

குறள் 504 (குணநாடிக்)

[தொகு]

'குணநாடிக் குற்றமு நாடி யவற்றுண்'குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்

'மிகைநாடி மிக்க கொளல். (04)'மிகை நாடி மிக்க கொளல்.

இதன்பொருள்
குணம் நாடி= குணம் குற்றங்களுள் ஒன்றே உடையார் உலகத்து இன்மையின் ஒருவன் குணங்களை ஆராய்ந்து; குற்றமும் நாடி= ஏனைக் குற்றங்களையும் ஆராய்ந்து; அவற்றுள் மிகை நாடி= பின் அவ்விரு பகுதியுள்ளும் மிக்கவற்றை ஆராய்ந்து; மிக்க கொளல்= அவனை அம்மிக்கவற்றானே அறிக.
உரைவிளக்கம்
மிகை உடையவற்றை 'மிகை' என்றார். அவையாவன: தலைமையானாக, பன்மையானாக உயர்ந்தன. அவற்றான் அறிதலாவது, குணமிக்கதாயின் வினைக்கு உரியன் என்றும், குற்றம் மிக்கதாயின் அல்லன் என்றும் அறிதல். குணமே உடையார் உலகத்து அரியர் ஆகலின், இவ்வகை யாவரையும் தெளிக என்பது இதனான் கூறப்பட்டது.

குறள் 505 (பெருமைக்கு)

[தொகு]

'பெருமைக்கு மேனைச் சிறுமைக்குந் தத்தங்'பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்

'கருமமே கட்டளைக் கல். (05)'கருமமே கட்டளைக் கல்.

இதன்பொருள்
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் கட்டளைக்கல்= பிறப்பு, குணம், அறிவு என்பனவற்றான் மக்கள் எய்தும் பெருமைக்கும் மற்றைச் சிறுமைக்கும் உரைகல்லாவது; தத்தம் கருமமே= தாம்தாம் செய்யும் கருமமே, பிறிதில்லை.
உரைவிளக்கம்
இஃது ஏகதேச உருவகம். மக்களது பெருமையும் சிறுமையும் தப்பாமல் அறியலுறுவார்க்குப் பிற கருவிகளும் உளவாயினும், முடிந்த கருவி செயல் என்பது, தேற்றேகாரத்தாற் பெற்றாம். இதனாற் குணம் குற்றங்கள் நாடற்குக் கருவி கூறப்பட்டது.

குறள் 506 (அற்றாரைத்)

[தொகு]

'அற்றாரைத் தேறுத லோம்புக மற்றவர்'அற்றாரைத் தேறுதல் ஒம்புக மற்று அவர்

'பற்றிலர் நாணார் பழி. (06)'பற்று இலர் நாணார் பழி.

இதன்பொருள்
அற்றாரைத் தேறுதல் ஓம்புக= சுற்றம் இல்லாரைத் தெளிதலை ஒழிக; அவர் மற்றுப் பற்று இலர் = அவர் உலகத்தோடு தொடர்பிலர்; பழி நாணார்= ஆகலாற் பழிக்கு அஞ்சார்.
உரைவிளக்கம்
'பற்றிலர்' என்பதனால், சுற்றம் என்பது வருவிக்கப்பட்டது. உலகத்தார் பழிப்பன ஒழிதற்கும், புகழ்வன செய்தற்கும் ஏதுவாகிய உலகநடை இயல்பு, சுற்றம் இல்லாதார்க்கு இன்மையின், அவர் தெளியப்படார் என்பதாம்.

குறள் 507 (காதன்மை)

[தொகு]

'காதன்மை கந்தா வறிவறியார்த் தேறுதல்'காதன்மை கந்தா அறிவு அறியார்த் தேறுதல்

'பேதைமை யெல்லாந் தரும். (07)'பேதைமை எல்லாம் தரும்.

இதன்பொருள்
காதன்மை கந்தா அறிவு அறியார்த் தேறுதல்= அன்புடைமை பற்றுக்கோடாகத் தமக்கு அறிய வேண்டுவன அறியாதாரைத் தெளிதல்; பேதைமை எல்லாம் தரும்= அரசனுக்கு எல்லா அறியாமையையும் கொடுக்கும்.
உரைவிளக்கம்
தன்னோடு அவரிடைநின்ற அன்புபற்றி, அரசன் அறிவிலார்மேல் வினையை வைப்பின், அஃது அவர் அறிவின்மையாற் கெடும்; கெட்டால், அவர்க்கு உளதே அன்றி, வினைக்குரியாரை அறியாமை, மேல் விளைவு அறியாமை முதலாக அவனுக்கு அறியாமை பல உளவாம் என்பதாம்.

குறள் 508 (தேரான்)

[தொகு]

'தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை'தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை

'தீரா விடும்பை தரும். (08)'தீரா இடும்பை தரும்.

இதன்பொருள்
பிறனைத் தேரான் தெளிந்தான்= தன்னொடு இயைபுடையன் அல்லாதானைப் பிறப்பு முதலியவற்றானும், செயலானும் ஆராய்ந்து தெளிந்த அரசனுக்கு; வழிமுறை தீரா இடும்பைதரும்= அத்தெளிவு தன் வழிமுறையினும் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்.
உரைவிளக்கம்
இயைபு, தன் குடியொடு தொடர்ந்த மரபு. இதனானே அதுவும் வேண்டும் என்பது பெற்றாம். தெளிதல், அவன்கண்ணே வினையை வைத்தல். அவ்வினை கெடுதலால் தன்குலத்துப் பிறந்தாரும், பகைவர் கைப்பட்டுக் கீழாய் விடுவர் என்பதாம். நான்கன் உருபு விகாரத்தான் தொக்கது.

குறள் 509 (தேறற்க)

[தொகு]

'தேறற்க யாரையுந் தேராது தேர்ந்தபின்'தேறற்க யாரையும் தேராது தேர்ந்த பின்

'றேறுக தேறும் பொருள். (09)' தேறுக தேறும் பொருள்.

இதன்பொருள்
யாரையும் தேராது தேறற்க= யாவரையும் ஆராயாது தெளியாது ஒழிக; தேர்ந்தபின் தேறும் பொருள் தேறுக= ஆராய்ந்தபின் தெளியும் பொருட்களை ஐயுறாது ஒழிக.
உரைவிளக்கம்
'தேறற்க' என்ற பொதுமையான், ஒரு வினைக்கண்ணும் தெளியலாகாது என்பது பெற்றாம். ஈண்டுத் 'தேறுக' என்றது, தாற்பரியத்தால் ஐயுறவினது விலக்கின்மேல் நின்றது. 'தேறும் பொருள்' என்றது, அவரவர் ஆற்றற்கு ஏற்ற வினைகளை. 'பொருள்' ஆகுபெயர்.

குறள் 510 (தேரான்தெளிவும்)

[தொகு]

'தேரான் றெளிவுந் தெளிந்தான்க ணையுறவுந்'தேரான் தெளிவும் தெளிந்தான் கண் ஐயுறவும்

'தீரா விடும்பை தரும். (10)'தீரா இடும்பை தரும்.

இதன்பொருள்
தேரான் தெளிவும்= அரசன் ஒருவனை ஆராயாது தெளிதலும்; தெளிந்தான்கண் ஐயுறவும்= ஆராய்ந்து தெளிந்தவன்மாட்டு ஐயப்படுதலும் இவ்விரண்டும்; தீரா இடும்பை தரும்= அவனுக்கு நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்.
உரைவிளக்கம்
வினை வைத்தபின் ஒரு தவறு காணாது வைத்து ஐயுறுமாயின், அதனை அவன் அறிந்து இனி இது நில்லாது என்னும் கருத்தான் அவ்வினையை நெகிழ்த்துவிடும்; அதுவேயன்றிப் பகைவரால் எளிதிற் பிரிக்கவும்படும்; ஆதலால், 'தெளிந்தான்கண் ஐயுறவு'ம் ஆகாவாயிற்று. தெளிவிற்கு எல்லை கூறியவாறு.
இவை ஐந்து பாட்டானும் தெளியப்படாதார் இவர் என்பதூஉம், அவரைத்தெளிந்தாற் படும் இழுக்கும், தெளிவிற்கு எல்லையும் கூறப்பட்டன.