திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/74.நாடு
1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து
2.வான்சிறப்பு
3.நீத்தார்பெருமை
4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை
6.வாழ்க்கைத்துணைநலம்
7.மக்கட்பேறு
8.அன்புடைமை
9.விருந்தோம்பல்
10.இனியவைகூறல்
11.செய்ந்நன்றியறிதல்
12.நடுவுநிலைமை
13.அடக்கமுடைமை
14.ஒழுக்கமுடைமை
15.பிறனில்விழையாமை
16.பொறையுடைமை
17.அழுக்காறாமை
18.வெஃகாமை
19.புறங்கூறாமை
20.பயனிலசொல்லாமை
21.தீவினையச்சம்
22.ஒப்புரவறிதல்
23.ஈகை
24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை
26.புலான்மறுத்தல்
27.தவம்
28.கூடாவொழுக்கம்
29.கள்ளாமை
30.வாய்மை
31.வெகுளாமை
32.இன்னாசெய்யாமை
33.கொல்லாமை
34.நிலையாமை
35.துறவு
36.மெய்யுணர்தல்
37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்
பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி
40.கல்வி
41.கல்லாமை
42.கேள்வி
43.அறிவுடைமை
44.குற்றங்கடிதல்
45.பெரியாரைத்துணைக்கோடல்
46.சிற்றினஞ்சேராமை
47.தெரிந்துசெயல்வகை
48.வலியறிதல்
49.காலமறிதல்
50.இடனறிதல்
51.தெரிந்துதெளிதல்
52.தெரிந்துவினையாடல்
53.சுற்றந்தழால்
54.பொச்சாவாமை
55.செங்கோன்மை
56.கொடுங்கோன்மை
57.வெருவந்தசெய்யாமை
58.கண்ணோட்டம்
59.ஒற்றாடல்
60.ஊக்கமுடைமை
61.மடியின்மை
62.ஆள்வினையுடைமை
63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு
65.சொல்வன்மை
66.வினைத்தூய்மை
67.வினைத்திட்பம்
68.வினைசெயல்வகை
69.தூது
70.மன்னரைச்சேர்ந்தொழுகல்
71.குறிப்பறிதல்
72.அவையறிதல்
73.அவையஞ்சாமை
74.நாடு
75.அரண்
76.பொருள்செயல்வகை
77.படைமாட்சி
78.படைச்செருக்கு
79.நட்பு
80.நட்பாராய்தல்
81.பழைமை
82.தீநட்பு
83.கூடாநட்பு
84.பேதைமை
85.புல்லறிவாண்மை
86.இகல்
87.பகைமாட்சி
88.பகைத்திறந்தெரிதல்
89.உட்பகை.
90.பெரியாரைப்பிழையாமை
91.பெண்வழிச்சேறல்
92.வரைவின்மகளிர்
93.கள்ளுண்ணாமை
94.சூது
95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை
97.மானம்
98.பெருமை
99.சான்றாண்மை
100.பண்புடைமை
101.நன்றியில்செல்வம்
102.நாணுடைமை
103.குடிசெயல்வகை
104.உழவு
105.நல்குரவு
106.இரவு
107.இரவச்சம்
108.கயமை
1.களவியல்
109.தகையணங்குறுத்தல்
110.குறிப்பறிதல்
111.புணர்ச்சிமகிழ்தல்
112.நலம்புனைந்துரைத்தல்
113.காதற்சிறப்புரைத்தல்
114.நாணுத்துறவுரைத்தல்
115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை
117.படர்மெலிந்திரங்கல்
118.கண்விதுப்பழிதல்
119.பசப்புறுபருவரல்
120.தனிப்படர்மிகுதி
121.நினைந்தவர்புலம்பல்
122.கனவுநிலையுரைத்தல்
123.பொழுதுகண்டிரங்கல்
124.உறுப்புநலனழிதல்
125.நெஞ்சொடுகிளத்தல்
126.நிறையழிதல்
127.அவர்வயின்விதும்பல்
128.குறிப்பறிவுறுத்தல்
129.புணர்ச்சிவிதும்பல்
130.நெஞ்சொடுபுலத்தல்
131.புலவி
132.புலவிநுணுக்கம்
133.ஊடலுவகை
திருக்குறள் பொருட்பால் 2.அங்கவியல்
[தொகு]அதிகாரம் 74.நாடு
[தொகு]பரிமேலழகர் உரை
[தொகு]- அதிகார முன்னுரை
- இனி அவ்வரசனாலும், அமைச்சனாலும் கொண்டுய்க்கப்படுவதாய், ஏனை அரண் முதலிய அங்கங்கட்கு இன்றியமையாச் சிறப்பிற்றாய நாடு ஓரதிகாரத்தாற் கூறுகின்றார்.
குறள் 731 (தள்ளா )
[தொகு]தள்ளா விளையுளுந் தக்காருந் தாழ்விலாச் () தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்வு இலாச்
செல்வருஞ் சேர்வது நாடு. (01) செல்வரும் சேர்வது நாடு.
- இதன்பொருள்
- தள்ளா விளையுளும்= குன்றாத விளையுளைச் செய்வோரும்; தக்காரும்= அறவோரும்; தாழ்வு இலாச் செல்வரும்= கேடில்லாத செல்வம் உடையோரும்; சேர்வது நாடு= ஒருங்கு வாழ்வதே நாடாவது.
- உரை விளக்கம்
- மற்றை உயர்திணைப் பொருள்களோடும் சேர்தல் தொழிலோடும் இயையாமையின், விளையுள் என்றது உழவர்மேல் நின்றது. குன்றாமை: எல்லா உணவுகளும் நிறைய உளவாதல். இதனான் வாழ்வார்க்கு வறுமையின்மை பெறப்பட்டது. அறவோர்: துறந்தோர், அந்தணர் முதலாயினார். "நற்றவஞ் செய்வார்க்கிடந் தவஞ்செய்வார்க்கும் அஃதிடம்"฿ என்றார் பிறரும். இதனால் அழிவின்மை பெறப்பட்டது. கேடில்லாமை: வழங்கத்தொலையாமை. செல்வர்:கலத்தினும் காலினும் அரும்பொருள் தரும் வணிகர். இதனால், அரசனுக்கும் வாழ்வார்க்கும் பொருள் வாய்த்தல் பெறப்பட்டது.
฿.சீவகசிந்தாமணி, நாமகள் இலம்பகம்: 48.
குறள் 732( பெரும்பொருளாற்)
[தொகு]பெரும்பொருளாற் பெட்டத்த தாகி யருங்கேட்டா () பெரும் பொருளால் பெட்டக்கது ஆகி அரும் கேட்டால்
லாற்ற விளைவது நாடு. (02) ஆற்ற விளைவது நாடு.
- இதன்பொருள்
- பெரும் பொருளால் பெட்டக்கது ஆகி= அளவிறந்த பொருளுடைமையாற் பிற தேயத்தாரானும் விரும்பத்தக்கதாய்; அருங் கேட்டால் ஆற்ற விளைவது நாடு= கேடின்மையோடு கூடி மிகவிளைவதே நாடாவது.
- உரை விளக்கம்
- அளவிறப்பு, பொருள்களது பன்மை மேலும், தனித்தனி அவற்றின் மிகுதிமேலும் நின்றது. கேடாவது மிக்க பெயல், பெயலின்மை, எலி, விட்டில், கிளி, அரசண்மை என்று இவற்றான் வருவது. "மிக்கபெய லொடுபெய லின்மையெலி விட்டில் கிளி, யக்கணரசன்மையோ டாறு." இவற்றை வடநூலார் ஈதிகள் என்ப. இவற்றுள் முன்னையவற்றது இன்மை அரசன் அறத்தானும், பின்னையதின்மை அவன் மறத்தானும் வரும். இவ்வி்ன்மைகளான் மிக விளைவதாயிற்று.
குறள் 733 (பொறையொருங்கு )
[தொகு]பொறையொருங்கு மேல்வருங்காற் றாங்கி யிறைவற் () பொறை ஒருங்கு மேல் வரும்கால் தாங்கி இறைவற்கு
கிறையொருங்கு நேர்வது நாடு. (03) இறை ஒருங்கு நேர்வது நாடு.
- இதன்பொருள்
- பொறை ஒருங்கு மேல்வருங்கால் தாங்கி= பிற நாடுகள் பொறுத்த பாரம் எல்லாம் ஒருங்கே தன்கண் வருங்கால் அவற்றைத் தாங்கி; இறைவற்கு இறை ஒருங்கு நேர்வது நாடு= அதன்மேல் தன் அரசனுக்கு, இறைப்பொருள் முழுதையும் உடம்பட்டுக் கொடுப்பதே நாடாவது.
- உரை விளக்கம்
- பாரங்கள் மக்கள் தொகுதியும், ஆன் எருமை முதலிய விலங்குத் தொகுதியும். 'தாங்கு'தல் அவை தத்தம் தேயத்துப் பகைவந்து இறுத்ததாக, அரசு கோல் கோடியதாக, உணவு இன்மையானாகத் தன்கண் வந்தால், அவ்வத் தேயங்களைப் போல இனிது இருப்பச் செய்தல். அச்செயலால் இறையைக் குறைப்படுத்தாது தானே கொடுப்பது என்பார், 'இறையொருங்கு நேர்வது' என்றார்.
குறள் 734 (உறுபசியு )
[தொகு]உறுபசியு மோவாப் பிணியுஞ் செறுபகையுஞ் () உறு பசியும் ஓவாப் பிணியும் செறு பகையும்
சேரா தியல்வது நாடு. (04) சேராது இயல்வது நாடு.
- இதன்பொருள்
- உறு பசியும்= மிக்க பசியும்; ஓவாப் பிணியும்= நீங்காத நோயும்; செறு பகையும் சேராது= புறத்து நின்று வந்து அழிவுசெய்யும் பகையும் இன்றி; இயல்வது நாடு= இனிது நடப்பதே நாடாவது.
- உரை விளக்கம்
- 'உறுபசி' உழவர் உடைமையானும், ஆற்ற விளைதலானும் சேராதாயிற்று. 'ஓவாப்பிணி' தீக்காற்று மிக்க குளிர் வெப்பங்களும் நுகரப்படும் அவற்றது தீமை இன்மையிற் சேராதாயிற்று. 'செறு பகை' அரசனாற்றலும், நிலைப்படையும் அடவியும் அரணும் உடைமையிற் சேராதாயிற்று.
குறள் 735 (பல்குழுவும் )
[தொகு]பல்குழுவும் பாழ்செய்யு முட்பகையும் வேந்தலைக்குங் () பல் குழுவும் பாழ் செய்யும் உட் பகையும் வேந்து அலைக்கும்
கொல்குறும்பு மில்லது நாடு. (05) கொல் குறும்பும் இல்லது நாடு.
- இதன்பொருள்
- பல் குழுவும்= சங்கேத வயத்தான் மாறுபட்டுக் கூடும் பல கூட்டமும்; பாழ் செய்யும் உட்பகையும்= உடனுறையாநின்றே பாழாகச் செய்யும் உட்பகையும்; வேந்து அலைக்கும் கொல் குறும்பும் இல்லது நாடு= அளவு வந்தால் வேந்தனை அலைக்கும் கொல்வினைக் குறும்பரும் இல்லாததே நாடாவது.
- உரை விளக்கம்
- சங்கேதம், சாதிபற்றியும், கடவுள் பற்றியும் பலர்க்கு உளதாம் ஒருமை. உட்பகை: ஆறலைப்பார், கள்வர், குறளை கூறுவார் முதலிய மக்களும், பன்றி, புலி, கரடி முதலிய விலங்குகளும். 'உட்பகை', 'குறும்பு' என்பன ஆகுபெயர். இம்மூன்றும் அரசனாலும், வாழ்வாராலும் கடியப்பட்டு நடப்பதே நாடு என்பதாம்.
குறள் 736(கேடறியாக் )
[தொகு]கேடறியாக் கெட்ட விடத்தும் வளங்குன்றா () கேடு அறியாக் கெட்ட இடத்தும் வளம் குன்றா
நாடென்ப நாட்டிற் றலை. (06) நாடு என்ப நாட்டில் தலை.
- இதன்பொருள்
- கேடு அறியா= பகைவரால் கெடுதல் அறியாததாய்; கெட்ட இடத்தும் வளம் குன்றா நாடு= அரிதிற் கெட்டதாயினும் அப்பொழுதும் தன் வளம் குன்றாத நாட்டினை; நாட்டின் தலை என்ப= எல்லா நாட்டினும் தலை என்று சொல்லுவர் நூலோர்.
- உரை விளக்கம்
- அறியாத குன்றாத என்னும் பெயரெச்சங்களின் இறுதிநிலைகள் விகாரத்தால் தொக்கன. 'கேடறியாமை' அரசன் ஆற்றலானும், கடவுள் பூசை அறங்கள் என்று இவற்றது செயலானும் வரும். வளம் ஆகரங்களிற் படுவனவும், வயலினும், தண்டலையினும் விளைவனவுமாம். 'குன்றாமை' அவை செய்யவேண்டாமல் இயல்பாகவே உளவாயும், முன்னீட்டப்பட்டும் குறைவறுதல்.
- இவை ஆறுபாட்டானும் நாட்டது இலக்கணம் கூறப்பட்டது.
குறள் 737 (இருபுனலும் )
[தொகு]இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் () இரு புனலும் வாய்ந்த மலையும் வரு புனலும்
வல்லரணு நாட்டிற் குறுப்பு. (07) வல் அரணும் நாட்டிற்கு உறுப்பு.
- இதன்பொருள்
- இருபுனலும்= கீழ்நீர், மேனீர் எனப்பட்ட தண்ணீரும்; வாய்ந்த மலையும்= வாய்ப்புடைத்தாய மலையும்; வருபுனலும்= அதனின்றும் வருவதாய நீரும்; வல் அரணும்= அழியாத நகரியும்; நாட்டிற்கு உறுப்பு= நாட்டிற்கு அவயவமாம்.
- உரை விளக்கம்
- ஈண்டுப் 'புனல்' என்றது, துரவு கேணிகளும் ஏரிகளும் ஆறுகளுமாகிய ஆதாரங்களை; அவயவம் ஆதற்கு உரியன அவையே ஆகலின். அவற்றான் வானம் வறப்பினும் வளனுடைமை பெறப்பட்டது. இடையதன்றி ஒருபுடையதாகலும், தன் வளந்தருதலும், மாரிக்கண் உண்டநீர் கோடைக்கண் உமிழ்தலும் உடைமை பற்றி, 'வாய்ந்த மலை' என்றார். 'அரண்' ஆகுபெயர். இதனான் அவயவம் கூறப்பட்டது.
குறள் 738 (பிணியின்மை )
[தொகு]பிணியின்மை செல்வம் விளைவின்ப மேம () பிணி இன்மை செல்வம் விளைவு இன்பம் ஏமம்
மணியென்ப நாட்டிற்கிவ் வைந்து. (08) அணி என்ப நாட்டிற்கு இவ் ஐந்து.
இதன் பொருள்:
- பிணி இன்மை செல்வம் விளைவு இன்பம் ஏமம் இவ் ஐந்து= நோயின்மையும், செல்வம் விளைதல், இன்பம், காவல் என்று இவை உடைமையும் ஆகிய இவ்வைந்தினையும்; நாட்டிற்கு அணி என்ப= நாட்டிற்கு அழகு என்று சொல்லுவர் நூலோர்.
உரை விளக்கம்:
- 'பிணியின்மை' நிலநலத்தான் வருவது. 'செல்வம்' மேற்சொல்லியன. 'இன்பம்' விழவும் வேள்வியும் சான்றோரும் உடைமையானும், நுகர்வன உடைமையானும், நிலநீர்களது நன்மையானும், வாழ்வார்க்கு உள்நிகழ்வது. 'காவல்' எனவே, அரசன் காவலும், வாழ்வோர் காவலும், அரண்காவலும் அடங்கின. பிற தேயங்களின் உள்ளாரும் விழைந்து பின் அவை உள்ளாமைக்கு ஏதுவாய அதன் அழகு இதனான் கூறப்பட்டது.
குறள் 739(நாடென்ப )
[தொகு]நாடென்ப நாடா வளத்தன நாடல்ல () நாடு என்ப நாடா வளத்தன நாடு அல்ல
நாட வளந்தரு நாடு. (09) நாட வளம் தரு நாடு.
- இதன்பொருள்
- நாடா வளத்தன நாடு என்ப= தங்கண் வாழ்வார் தேடி வருந்தாமல் அவர்பால் தானே அடையும் செல்வத்தை உடையவற்றை நூலோர் நாடு என்று சொல்லுவர்; நாட வளம் தரும் நாடு நாடு அல்ல= ஆதலான் தேடி வருந்தச் செல்வம் அடைவிக்கும் நாடுகள் நாடாகா.
- உரை விளக்கம்
- 'நாடுதல்' இருவழியும் வருத்தத்தின்மேல் நின்றது. "பொருள் செய்வார்க்கும் அஃதிடம்"¶ என்றார் பிறரும். நூலோர் விதிபற்றி எதிர்மறைமுகத்தான் குற்றம் கூறியவாறு. இவ்வாறன்றி 'என்ப' என்பதனைப் பின்னும் கூட்டி இரு பொருள்பட உரைப்பின் அனுவாதமாம்.
¶. சீவகசிந்தாமணி, நாமகள் இலம்பகம்: 48.
குறள் 740 (ஆங்கமை )
[தொகு]ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே () ஆங்கு அமைவு எய்தியக் கண்ணும் பயம் இன்றே
வேந்தமை வில்லாத நாடு. (10) வேந்து அமைவு இல்லாத நாடு.
- இதன்பொருள்
- வேந்து அமைவு இல்லாத நாடு= வேந்தனோடு மேவதல் இல்லாத நாடு; ஆங்கு அமைவு எய்தியக் கணணும் பயம் இன்றே= மேற்சொல்லிய குணங்கள் எல்லாவற்றினும் நிறைந்து இருந்ததாயினும் அவற்றாற் பயனுடைத்தன்று.
- உரை விளக்கம்
- வேந்தமைவு எனவே, குடிகள் அவன்மாட்டு அன்புடையர் ஆதலும், அவன்தான் இவர் மாட்டு அருளுடையன் ஆதலும் அடங்கின. அவை இல்வழி வாழ்வோர் இன்மையின், அவற்றான் பயனின்று ஆயிற்று.
- இவை இரண்டுபாட்டானும் அதன் குற்றம் கூறப்பட்டது.