திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/76.பொருள்செயல்வகை

விக்கிமூலம் இலிருந்து

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


76.பொருள்செயல்வகை[தொகு]

திருக்குறள் பொருட்பால்- அங்கவியல்[தொகு]

பரிமேலழகர் உரை[தொகு]

அதிகாரம் 76. பொருள் செயல்வகை[தொகு]

அதிகார முன்னுரை
இனிப் பெரும்பான்மையும் நாட்டானும், அரணானும் ஆக்கவும் காக்கவும் படுவதாய பொருளைச் செய்தலின் திறம் இவ்வதிகாரத்தான் கூறுகிறார்.

குறள் 751 (பொருளல்லவரைப் )[தொகு]

பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் () பொருள் அல்லவரைப் பொருள் ஆகச் செய்யும்

பொருளல்ல தில்லை பொருள். (01) பொருள் அல்லது இல்லை பொருள்.

தொடரமைப்பு: "பொருள் அல்லவரைப் பொருளாகச் செய்யும் பொருள்அல்லது, பொருள் இல்லை".)

இதன்பொருள்
பொருள் அல்லவரைப் பொருளாகச் செய்யும் பொருள்அல்லது= ஒரு பொருளாக மதிக்கப்படாதாரையும் படுவராகச் செய்யவல்ல பொருளை ஒழிய; பொருள் இல்லை= ஒருவனுக்குப் பொருளாவது இல்லை.
உரைவிளக்கம்
மதிக்கப்படாதார்: அறிவிலாதார், இழிகுலத்தார். இழிவு சிறப்பும்மை விகாரத்தான் தொக்கது. மதிக்கப்படுவாராகச் செய்தல், அறிவுடையாரும் உயர்குலத்தாரும் அவர்பால் சென்று நிற்கப்பண்ணுதல். அதனால் ஈட்டப்படுவது அதுவே, பிறிதில்லை என்பதாம்.

குறள் 752( இல்லாரை)[தொகு]

இல்லாரை யெல்லாரு மெள்ளுவர் செல்வரை () இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை

யெல்லாருஞ் செய்வர் சிறப்பு. (02) எல்லாரும் செய்வர் சிறப்பு.

தொடரமைப்பு: "இல்லாரை எல்லாரும் எள்ளுவர், செல்வரை எல்லாரும் சிறப்புச் செய்வர்".

(இதன்பொருள்
இல்லாரை எல்லாரும் எள்ளுவர்= எல்லாநன்மையும் உடையராயினும் பொருள் இல்லாரை யாவரும் இகழ்வர்; செல்வரை எல்லாரும் சிறப்புச் செய்வர்= எல்லாத் தீமையும் உடையராயினும் அஃது உடையாரை யாவரும் உயரச் செய்வர்.
உரைவிளக்கம்
உயரச்செய்தல்= தாம் தாழ்ந்து நி்ற்றல். இகழ்தற்கண்ணு்ம் தாழ்தற்கண்ணும் பகைவர், நட்டார், நொதுமலர் என்னும் மூவகையாரும் ஒத்தலின், யாவரும் என்றார். பின்னும் கூறியது, அதனை வலியுறுத்தல் பொருட்டு.

குறள் 753 (பொருளென்னும் )[தொகு]

பொருளென்னும் பொய்யா விளக்க மிருளறுக்கு () பொருள் என்னும் பொய்யா விளக்கம் இருள் அறுக்கும்

மெண்ணிய தேயத்துச் சென்று. (03) எண்ணிய தேயத்துச் சென்று.

தொடரமைப்பு: "பொருள் என்னும் பொய்யாவிளக்கம், எண்ணிய தேயத்துச் சென்று இருளறுக்கும்".

இதன்பொருள்
பொருள் என்னும் பொய்யா விளக்கம்= பொருள் என்று எல்லாரானும் சிறப்பிக்கப்படும் நந்தா விளக்கு; எண்ணிய தேயத்துச் சென்று இருள் அறுக்கும்= தன்னைச் செய்தவர்க்கு அவர் நினைத்த தேயத்துச் சென்று பகையென்னும் இருளைக் கெடுக்கும்.
உரைவிளக்கம்
எல்லார்க்கும் எஞ்ஞான்றும் இன்றியமையாததாய் வருதல் பற்றிப் பொய்யாவிளக்கம் என்றும், ஏனை விளக்கோடு இதனிடை வேற்றுமை தோன்ற எண்ணிய தேயத்துச் சென்று என்றும் கூறினார். ஏகதேச உருவகம்.
இவை மூன்று பாட்டானும் பொருளது சிறப்புக் கூறப்பட்டது.

குறள் 754 (அறனீனும் )[தொகு]

அறனீனு மின்பமு மீனுந் திறனறிந்து () அறன் ஈனும் இன்பமும் ஈனும் திறன் அறிந்து

தீதின்றி வந்த பொருள். (04) தீது இன்றி வந்த பொருள்.

தொடரமைப்பு: "திறன் அறிந்து தீது இன்றி வந்த பொருள், அறன் ஈனும் இன்பமும் ஈனும்".

இதன்பொருள்
திறன் அறிந்து தீது இன்றி வந்த பொருள்= செய்யும்திறத்தினை அறிந்து அரசன் கொடுங்கோன்மை இலனாக உளதாய பொருள்; அறன் ஈனும் இன்பமும் ஈனும்= அவனுக்கு அறத்தையும் கொடுக்கும், இன்பத்தையும் கொடுக்கும்.
உரைவிளக்கம்
செய்யும் திறம்: தான் பொருள் செய்தற்கு உரிய நெறி. இலனாக என்பது இன்றி எனத் திரிந்துநின்றது. செங்கோலன் என்று புகழப்படுதலானும், கடவுட்பூசை தானங்களான் பயன்எய்தலானும் 'அறன்ஈனும்' என்றும், நெடுங்காலம் துய்க்கப்படுதலான் 'இன்பமும் ஈனும்' என்றும் கூறினார். அத்திறத்தான் ஈட்டுக என்பதாம்.

குறள் 755 (அருளொடும் )[தொகு]

அருளொடு மன்பொடும் வாரார் பொருளாக்கம் () அருளொடும் அன்பொடும் வாராப் பொருள் ஆக்கம்

புல்லார் புரள விடல். (05) புல்லார் புரள விடல்.

தொடரமைப்பு: "அருளொடும் அன்பொடும் வாராப் பொருள் ஆக்கம் புல்லார் புரள விடல்".

இதன்பொருள்
அருளொடும் அன்பொடும் வாராப் பொருள் ஆக்கம்= தாம் குடிகள்மாட்டுச் செய்யும் அருளோடும், அவர் தம்மாட்டுச் செய்யும் அன்போடும் கூடி வாராத பொருள் ஈட்டத்தை; புல்லார் புரள விடல்= அரசர் பொருந்தாது கழிய விடுக.
உரைவிளக்கம்
அவற்றோடு கூடி வருதலாவது, ஆறில் ஒன்றாய் வருதல். அவ்வாறு வாராத பொருளீட்டம் 'பசுமட் கலத்துள் நீர்'போலச் செய்தானையும் கொண்டு இறத்தலின், அதனைப் 'புல்லார்' என்று ஒழியாது, 'புரளவிடல்' என்றும் கூறினார்.

குறள் 756(உறுபொருளும் )[தொகு]

உறுபொருளு முல்கு பொருளுந்தன் னொன்னார்த் () உறு பொருளும் உல்கு பொருளும் தன் ஒன்னார்த்

தெறுபொருளும் வேந்தன் பொருள். (06) தெறு பொருளும் வேந்தன் பொருள்.

தொடரமைப்பு: "உறு பொருளும், உல்கு பொருளும், தன் ஒன்னார்த் தெறு பொருளும், வேந்தன் பொருள்".

இதன்பொருள்
உறு பொருளும்= உடையார் இன்மையின் தானே வந்துற்ற பொருளும்; உல்கு பொருளும்= சுங்கமாகிய பொருளும்; தன் ஒன்னார்த் தெறு பொருளும்= தன் பகைவரைத் திறையாகக் கொள்ளும் பொருளு்ம; வேந்தன் பொருள்= அரசனுக்குரிய பொருள்கள்.
உரைவிளக்கம்
'உறு பொருள்' வைத்தார் இறந்துபோக நெடுங்காலம் நிலத்தின்கண் கிடந்து பின் கண்டெடுத்ததூஉம், தாயத்தார் பெறாததூஉம்ஆம். சுங்கம் கலத்தினும் காலினும் வரும் பண்டங்கட்கு இறையாயது. 'தெறுபொருள்' தெறுதலான் வரும் பொருள் எனவிரியும். ஆறின்ஒன்று ஒழியவும் உரியன கூறியவாறு.
இவை மூன்று பாட்டானும் அஃது ஈட்டும்நெறி கூறப்பட்டது.

குறள் 757 (அருளென்னும் )[தொகு]

அருளென்னு மன்பீன் குழவி பொருளென்னுஞ் () அருள் என்னும் அன்பு ஈன் குழவி பொருள் என்னும்

செல்வச் செவிலியா லுண்டு. (07) செல்வச் செவிலியால் உண்டு.

தொடரமைப்பு: "அன்பு ஈன் அருள் என்னும் குழவி, பொருள் என்னும் செல்வச் செவிலியால் உண்டு."

இதன்பொருள்
அன்பு ஈன் அருள் என்னும் குழவி= அன்பினால் ஈனப்பட்ட அருள் என்னும் குழவி; பொருள் என்னும் செல்வச் செவிலியால் உண்டு= பொருள் என்று உயர்த்துச் சொல்லப்படும் செல்வத்தையுடைய செவிலியான் வளரும்.
உரைவிளக்கம்
தொடர்பு பற்றாதே வருத்தமுற்றார் மேல் செல்வதாய அருள், தொடர்புபற்றிச் செல்லும் அன்பு முதிர்ந்து உளதாவதாகலின், அதனை 'அன்பீன் குழவி' என்றும், அது வறியான்மேற் செல்வது அவ்வறுமை களைய வல்லார்க்குஆதலின், பொருளை அதற்குச் 'செவிலி' என்றும், அஃது உலகியற் செவிலி போலாது, தானே எல்லாப் பொருளும் உதவி வளர்த்தலின் 'செல்வச் செவிலி' என்றும் கூறினார்.

குறள் 758 (குன்றேறி )[தொகு]

குன்றேறி யானைப்போர் கண்டற்றாற் றன்கைத்தொன் () குன்று ஏறி யானைப் போர் கண்டு அற்றுஆல் தன் கைத்து ஒன்று

றுண்டாகச் செய்வான் வினை. (08) உண்டாகச் செய்வான் வினை.

தொடரமைப்பு: "தன் கைத்து உண்டாக ஒன்று செய்வான் வினை குன்று ஏறி யானைப்போர் கண்டற்றால்".

இதன்பொருள்
தன் கைத்து உண்டாக ஒன்று செய்வான் வினை= தன் கையதாகிய பொருளுண்டாக ஒரு வினையை எடுத்துக்கொண்டான் அதனைச் செய்தல்; குன்று ஏறி யானைப்போர் கண்டற்று= ஒருவன் மலைமேல் ஏறிநின்று யானைப்போரைக் கண்டால் ஒக்கும்.
உரைவிளக்கம்
'ஒன்று' என்பது, வினையாதல் 'செய்வான்' என்றதனாற் பெற்றாம். குன்றேறியான், அச்சமும் வருத்தமும் இன்றி, நிலத்திடை யானையும் யானையும் பொருபோரைத் தான் இனிதிருந்து காணும் அதுபோலக், கைத்துண்டாக வினையை மேற்கொண்டானும், அச்சமும் வருத்தமும் இன்றி வல்லாரை ஏவித் தான் இனிதிருந்து முடிக்கும் என்பதாம்.

குறள் 759(செய்கபொருளை )[தொகு]

செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கு () செய்க பொருளைச் செறுநர் செருக்கு அறுக்கும்

மெஃகதனிற் கூரிய தில். (09) எஃகு அதனில் கூரியது இல்.

தொடரமைப்பு: "பொருளைச் செய்க, செறுநர் செருக்கு அறுக்கும் எஃகு, அதனிற் கூரியது இல்".

இதன்பொருள்
பொருளைச் செய்க= தமக்கு ஒன்று உண்டாகக் கருதுவார் பொருளை உண்டாக்குக; செறுநர் செருக்கு அறுக்கும் எஃகு= தன் பகைவர் தருக்கினை அறுக்கும் படைக்கலம் அதுவாம்; அதனின் கூரியது இல்= அதற்கு அதுபோலக் கூரிய படைக்கலம் பிறிதில்லை.
உரைவிளக்கம்
அதுவாம், அதற்கு என்பன அவாய்நிலையான் வந்தன. பொருளைச் செய்யவே, பெரும்படையும் நட்பும் உடையராவர்; ஆகவே, பகைவர் தருக்கு ஒழிந்து தாமே அடங்குவர் என்பார், 'செறுநர் செருக்கு அறுக்கும் எஃகு' என்றும், ஏனை எஃகுகள் அதுபோல அருவப் பொருளை அறுக்கமாட்டாமையின், 'அதனின் கூரியது இல்' என்றும் கூறினார்.

குறள் 760 (ஒண்பொருள் )[தொகு]

ஒண்பொருள் காழ்ப்ப வியற்றியார்க் கெண்பொரு () ஒண் பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண் பொருள்

ளேனை யிரண்டு மொருங்கு. (10) ஏனை இரண்டும் ஒருங்கு.

தொடரமைப்பு: " ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு, ஏனை இரண்டும் ஒருங்கு எண் பொருள்."

இதன்பொருள்
ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு= நெறியான் வரும்பொருளை இறப்ப மிகப் படைத்தார்க்கு; ஏனை இரண்டும் ஒருங்கு எண் பொருள்= மற்றை அறனும் இன்பமும் ஒருங்கே எளிய பொருள்களாம்.
உரைவிளக்கம்
'காழ்'த்தல் முதிர்தல். பயன் கொடுத்தல்லது போகாமையின் 'ஒண்பொருள்' என்றும், ஏனை இரண்டும் அதன் விளைவாகலின், தாமே ஒரு காலத்திலே உளவாம் என்பார், 'எண்பொருள்' என்றும் கூறினார்.
இவை நான்கு பாட்டானும் அதனான் வரும் பயன் கூறப்பட்டது.