திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/97.மானம்

விக்கிமூலம் இலிருந்து

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


திருக்குறள் பொருட்பால்- 3. ஒழிபியல்[தொகு]

பரிமேலழகர் உரை[தொகு]

அதிகாரம் 97. மானம்[தொகு]

அதிகார முன்னுரை
இனிக் குடிப்பிறந்தார்க்கு உரியவாய குணங்கள் கூறுவான் தொடங்கி, முதற்கண் மானம் கூறுகின்றார். அஃதாவது, எஞ்ஞான்றும் தந்நிலையில் தாழாமையும், தெய்வத்தால் தாழ்வு வந்துழி உயிர்வாழாமையுமாம். இஃது, அக்குடிப்பிறப்பினை நிறுத்துதல் உடைமையின், அச்சிறப்புப் பற்றி முன் வைக்கப்பட்டது.

குறள் 961 (இன்றியமையாச் )[தொகு]

இன்றி யமையாச் சிறப்பின வாயினுங் () இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்

குன்ற வருப விடல். (01) குன்ற வருப விடல்.

தொடரமைப்பு: இன்றி அமையாச் சிறப்பின ஆயினும், குன்ற வருப விடல்.

இதன்பொருள்
இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்= செய்யாதவழித் தாம் அமையாத சிறப்பினை உடையவே எனினும்; குன்ற வருப விடல்= தம் குடிப்பிறப்புத் தாழவரும் செயல்களை ஒழிக.
உரை விளக்கம்
அமையாமை- இறத்தல். குடிப்பிறப்பு என்பது அதிகாரமுறைமையான் வந்தது. இறப்ப வருவழி இளிவந்தன செய்தாயினும் உய்க வென்னும் வடநூன் முறைமையை மறுத்து, உடம்பினது நிலையின்மையியையும், மானத்தினது நிலையுடைமையையுந் தூக்கி அவை செய்யற்க என்பதாம்.

குறள் 962(சீரினுஞ் )[தொகு]

சீரினுஞ் சீரல்ல செய்யாரே சீரொடு () சீரினும் சீர் அல்ல செய்யாரே சீரொடு

பேராண்மை வேண்டு பவர் (02) பேராண்மை வேண்டுபவர்.

தொடரமைப்பு:சீரினும் சீர் அல்ல செய்யாரே, சீரொடு பேராண்மை வேண்டுபவர்.

இதன்பொருள்
சீரினும் சீர் அல்ல செய்யாரே= புகழ்செய்யும் இடத்தும் தம் குடிமைக்கு ஒவ்வாத இளிவரவுகளைச் செய்யார்; சீரொடு பேராண்மை வேண்டுபவர்= புகழுடனே மானத்தை நிறுத்துதலை விரும்புவார்.
உரை விளக்கம்
எவ்விடத்தும் நிலைகுலையாத திண்மையான் உளதாதல்பற்றிப் 'பேராண்மை' எனப்பட்டது. நிலையுடைய புகழின் பொருட்டாகவும் செய்யார் என்பதாம்.

குறள் 963 (பெருக்கத்து )[தொகு]

பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய () பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய

சுருக்கத்து வேண்டு முயர்வு. (03) சுருக்கத்து வேண்டும் உயர்வு.

தொடரமைப்பு: பெருக்கத்துப் பணிதல் வேண்டும், சிறிய சுருக்கத்து உயர்வு வேண்டும்.

இதன்பொருள்
பெருக்கத்துப் பணிதல் வேண்டும்= குடிப்பிறந்தார்க்கு நிறைந்த செல்வம் உளதாயவழி யாவர்மாட்டும் பணிவு வேண்டும்; சிறிய சுருக்கத்து உயர்வு வேண்டும்= குறைந்த நல்குரவு உளதாயவழிப் பணியாமை வேண்டும்.
உரை விளக்கம்
பணியாமை, தாழ்வு வராமல் பழைய உயர்ச்சிக்கண்ணே நிற்றல். செல்வக்காலை அஃது உயர்ச்சி செய்யத் தாம் தாழ்தலும், அல்லற்காலை அது தாழ்வு செய்யத் தாம் உயர்தலும் வேண்டும் என்பதாம்.
இவை மூன்று பாட்டானும் தாம் தாழ்தற்கு ஏதுவாயின செய்யாமைச் சிறப்புக் கூறப்பட்டது.

குறள் 964 (தலையினிழிந்த )[தொகு]

தலையி னிழிந்த மயிரனையர் மாந்தர் () தலையின் இழிந்த மயிர் அனையர் மாந்தர்

நிலையி னிழிந்தக் கடை. (04) நிலையின் இழிந்தக் கடை.

தொடரமைப்பு: மாந்தர், நிலையின் இழிந்தக்கடை, தலையின் இழிந்த மயிர் அனையர்.

இதன்பொருள்
மாந்தர்= குடிப்பிறந்த மாந்தர்; நிலையின் இழிந்தக் கடை= தம் உயர்ந்த நிலையை விட்டு அதனினின்றும் தாழ்ந்தவழி; தலையின் இழிந்த மயி்ர் அனையர்= தலையைவிட்டு அதனினின்றும் வீழ்ந்த மயிரினை ஒப்பர்.
உரை விளக்கம்
அந்நிலையை விடாதுநின்றவழிப் பேணப்படுதலும், விட்டுத் தாழ்ந்தவழி இழிக்கப்படுதலும் உவமையாற் பெற்றாம்.

குறள் 965 ( குன்றியனையாருங்)[தொகு]

குன்றி னனையாருங் குன்றுவர் குன்றுவ () குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ

குன்றி யனைய செயின். (05) குன்றி அனைய செயின்.

தொடரமைப்பு: குன்றின் அனையாரும், குன்றுவ குன்றி அனைய செயின் குன்றுவர்.

இதன்பொருள்
= குன்றின் அனையாரும்= குடிப்பிறப்பான் மலைபோல உயர்ந்தோரும்; குன்றுவ குன்றி அனைய செயின் குன்றுவர் = தாழ்தற்கு ஏதுவாய செயல்களை ஒருகுன்றியளவாயினும் செய்வராயின் தாழ்வர்.
உரை விளக்கம்
குன்றியனையவும் என்னும் இழிவு சிறப்பும்மை விகாரத்தான் தொக்கது. தாழ்தற்கு ஏதுவாய செயல்களாவன இளிவந்தன. சொற்பின் வருநிலை.

குறள் 966(புகழின்றாற் )[தொகு]

புகழின்றாற் புத்தேணாட் டுய்யாதா லென்மற் () புகழ் இன்றால் புத்தேள் நாட்டு உய்யாதால் என் மற்று

றிகழ்வார்பின் சென்று நிலை. (06) இகழ்வார் பின் சென்று நிலை.

தொடரமைப்பு: இகழ்வார் பின் சென்றுநிலை, புகழ் இன்றால், புத்தேள் நாட்டு உய்யாதால், என் மற்று.

இதன்பொருள்
இகழ்வார் பின் சென்றுநிலை= மானத்தைவிட்டுத் தன்னை அவமதிப்பார் பின்னே ஒருவன்சென்று நிற்கின்ற நிலை; புகழ் இன்று= இவ்வுலகத்துப் புகழ் பயவாது; புத்தேள் நாட்டு உய்யாது= ஏனைப் புத்தேள் உலகத்துச் செலுத்தாது; மற்று என்= இனி, அவனுக்கு அது செய்வது யாது?
உரை விளக்கம்
புகழ் பயப்பதனைப் புகழ் என்றார். பயனாய இவ்விரண்டும் இன்றிக் கொன்னே மானம் கெடுக்கின்றது என்னை என்பதாம்.
இவை மூன்று பாட்டானும் அவை செய்தற்குற்றம் கூறப்பட்டது.

குறள் 967 (ஒட்டார்பின் )[தொகு]

ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலி னந்நிலையே () ஒட்டார் பின் சென்று ஒருவன் வாழ்தலின் அந் நிலையே

கெட்டா னெனப்படுத னன்று. (07) கெட்டான் எனப்படுதல் நன்று.

தொடரமைப்பு: ஒட்டார் பின்சென்று ஒருவன் வாழ்தலின், அந்நிலையே கெட்டான் எனப்படுதல் நன்று.

இதன்பொருள்
ஒட்டார் பின் சென்று ஒருவன் வாழ்தலின்= தன்னை இகழ்வார் பின்னே சென்று பொருள் பெற்று அதனால் ஒருவன் உயிர் வாழ்தலின்; அந்நிலையே கெட்டான் எனப்படுதல் நன்று= அது செய்யாது இறந்தான் என்று சொல்லப்படுதல் அவனுக்கு நன்று.
உரை விளக்கம்
ஒட்டுதல்- பொருந்துதல். 'அந்நிலையே' என்றது, செல்லாத முன்னை நிலைக்கண்ணே நின்று என்றவாறு; அப்பொழுதே என்றுமாம். புகழும், புத்தேள் நாடும் பயவாதேனும் பொருள்பெற்று உயிர் வாழ்வாம் என்பாரை நோக்கிக் கூறியது.

குறள் 968 (மருந்தோ )[தொகு]

மருந்தோமற் றூனோம்பும் வாழ்க்கை பெருந்தகைமை () மருந்தோ மற்று ஊன் ஓம்பும் வாழ்க்கை பெரும் தகைமை

பீடழிய வந்த விடத்து. (08) பீடு அழிய வந்த இடத்து.


தொடரமைப்பு: பெருந்தகைமை பீடு அழிய வந்த இடத்து, ஊன் ஓம்பும் வாழ்க்கை மற்று மருந்தோ?

இதன்பொருள்
பெருந்தகைமை பீடழிய வந்தவிடத்து= உயர்குடிப் பிறப்புத் தன் வலியாகிய மானம் அழிய வந்துழி; ஊன் ஓம்பும் வாழ்க்கை மற்று மருந்தோ= இறத்தல் ஒழிந்து பயனில்லாத உடம்பினைக் காக்கும் வாழ்க்கை பின்னும் இறவாமைக்கு மருந்தாகுமோ?
உரை விளக்கம்
'மற்று' என்பது, மேற்சொல்லிய இறப்பினை மாற்றிநின்றது. நற்குணங்கட்கு எல்லாம் இடனாதல் சிறப்புப்பற்றிப் 'பெருந்தகைமை' என்றும், அவை எல்லாவற்றுள்ளும் அதற்கு வலியாதல் சிறப்புப் பற்றிப் 'பீடு' என்றும், அஃது அழிந்தால் நின்ற வெற்றுடம்பு இழிக்கப்படுதலின், அதனை 'ஊன்' என்றும், பின்னும் இறத்தல் ஒருதலை என்பார், 'மருந்தோ' என்றும் கூறினார். மானத்தின் தொழில் அதற்கு இடனாகி குடிப்பிறப்பின்மேல் நின்றது.

குறள் 969(மயிர்நீப்பின் )[தொகு]

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா வன்னா () மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்

ருயிர்நீப்பர் மானம் வரின். (09) உயிர் நீப்பர் மானம் வரின்.

தொடரமைப்பு: மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார், மானம் வரின் உயிர் நீப்பர்.

இதன்பொருள்
மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்= தன் மயிர்த்திரளின் ஒருமயிர் நீங்கினும் உயிர் வாழாத கவரிமானை ஒப்பார்; மானம் வரின் உயிர் நீப்பர்= உயிர் நீங்கத் தான் மானம் எய்தும் எல்லைவரின், அதனைத் தாங்காது இறப்பர்.
உரை விளக்கம்
இழிவு சிறப்பும்மை விகாரத்தான் தொக்கது. உயிரும் மானமும் உடன் நில்லாமைக்கண், பின்னும் போவதாய உயிரை நீத்து, எஞ்ஞான்றும் நிற்பதாய மானத்தை எய்துவர் என்பதாம். உவமை அவர்க்கு அஃது இயல்பு என்பது விளக்கி நின்றது.

குறள் 970 (இளிவரின் )[தொகு]

இளிவரின் வாழாத மான முடையா () இளி வரின் வாழாத மானம் உடையார்

ரொளிதொழு தேத்து முலகு. (10) ஒளி தொழுது ஏத்தும் உலகு.

தொடரமைப்பு: இளிவரின் வாழாத மானம் உடையார் ஒளி, தொழுது ஏத்தும் உலகு.

இதன்பொருள்
இளிவரின் வாழாத மானம் உடையார் ஒளி= தமக்கோர் இழிவு வந்துழிப் பொறுத்து உயிர் வாழாது அதனை நீத்த மானம் உடையாரது புகழ் வடிவினை; தொழுது ஏத்தும் உலகு= எஞ்ஞான்றும் தொழுது துதியாநிற்பர் உலகத்தார்.
உரை விளக்கம்
"புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்/ வலவன் ஏவா வான வூர்தி/ எய்துவர்"Ȳ ஆகலி்ன், துறக்கச்செலவு சொல்லவேண்டா வாயிற்று.
இவை நான்கு பாட்டானும் மானப்பொருட்டாய இறப்பினது சிறப்புக் கூறப்பட்டது.
Ȳ- புறநானூறு, 27.